சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி உயர் கல்வி நிறுவனத்தின் 52-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஆட்சிக்குழு தலைவர் பவன் கோயங்கா தலைமை தாங்கினார்.
அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் கணித பேராசிரியர் மஞ்சுல் பார்கவா பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அவர் தனது உரையில், மாணவர்கள் தனித்துவம் மற்றும் படைப்பாற்றல் மிக்கவர்களாக திகழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பதக்கங்களையும் பரிசுகளையும் அவர் வழங்கினார். குடியரசுத் தலைவர் பரிசு மாணவர் ஆர்.சீனிவாசனுக்கும், ஆளுநர் பரிசு அக்சய் கிருஷ்ணாவுக்கும் வழங்கப்பட்டன. பிடெக், எம்டெக், எம்எஸ்சி, எம்பிஏ, எம்ஏ, எம்எஸ், பிஎச்டி ஆகிய படிப்புகளில் மொத்தம் 2,234 பேர் பட்டம் பெற்றனர்.
முன்னதாக, பேராசிரியர் மஞ்சுல் பார்கவா கணிதத்துறைக்கு ஆற்றிய பணியைப் பாராட்டி அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி வழங்கினார். விழாவில், ஐஐடி பதிவாளர் பூமா மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற் றோர் கலந்து கொண்டனர்.