குளத்தை சுத்தம் செய்யும் சிவக்குமார், தன் மனைவி மற்றும் மகள் நதியாவுடன் 
தமிழகம்

கோபத்தில் தன்னுடன் பேசாமல் இருந்த மகள்: நிபந்தனையை ஏற்று குளத்தை சுத்தம் செய்த தந்தை              

எஸ்.கோபாலகிருஷ்ணன்

கோபத்தில் தன்னுடன் பேசாமல் இருந்த தன் மகளின் நிபந்தனையை ஏற்ற தந்தை குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மருதவனம் காலனி தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் விவசாயக் கூலி. இவருக்கு அருள்மொழி என்ற மனைவியும் பத்தாம் வகுப்பு படிக்கும் விவேகானந்தன் என்ற மகனும் 7 ஆம் வகுப்பு படிக்கும் நதியா என்ற மகளும் உள்ளனர். இருவரும் மருதவனம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் சிவக்குமார் வீடு இடிந்தது. அதன்பிறகு சரிவர வேலையும் கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்த சிவக்குமார் தன் மனைவியிடம் அடிக்கடி சண்டை வளர்த்துள்ளார். இதனைக் கண்ட மகள் நதியா, தன் தந்தையிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். 8 மாதத்திற்கு மேல் தன் செல்ல மகள் தன்னிடம் பேசாததை நினைத்து வருந்திய சிவக்குமார். தன் மகள் நதியாவிடம், "நீ என்னிடம் பேச நான் என்ன செய்ய வேண்டும்," என்று கேட்டுள்ளார்.

அதற்கு நதியா, "இனி அம்மாவிடம் சண்டை போடக் கூடாது. நான் படிக்கும் பள்ளிக்கூடம் அருகில் உள்ள கருங்குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்," என்று கூறியுள்ளார்.

தன் செல்ல மகளுக்காக சிவக்குமார் சாப்பிடாமல் கூட குளத்தைச் சுத்தம் செய்தார். அவருடன் அவர் மனைவியும் அருள்மொழியும் இணைந்து சுத்தம் செய்தார். இந்நிகழ்வு அப்பகுதியில் உள்ளோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

SCROLL FOR NEXT