ரயில் முன்பதிவு டிக்கெட் வழங்கு வதில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகார்களையடுத்து, 8 டிராவல் ஏஜென்சிகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை யில் 4 ஐஆர்சிடிசி அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய ரயில்வே துறையின் துணை நிறுவனமாக இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) செயல்பட்டு வருகிறது. ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு டிக்கெட் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்தது. குறிப்பிட்ட 8 ஏஜென்சிகளுக்கு முன்பதிவு டிக்கெட் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது.
அதாவது, ஒரு விண்ணப்பத்தில் ஒருவர் முதல் 6 பேர் வரை மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ஆனால், ஒரே நேரத்தில் தலா 6 பேர் கொண்ட 6 விண்ணப்பங்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் குறிப்பிட்ட 8 ஏஜென்சிகளுக்கு ஐஆர்சிடிசி அதிகாரிகள் சிலர் சட்டவிரோதமாக தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தி முறைகேடுகளை செய்துள்ளனர். இதற்காக தொழில்நுட்ப ரீதியாக தனியாக மென்பொருளை தயாரித்துள்ளனர். இதன்மூலம் ஏஜென்சிகள் அதிக விலைக்கு பயணிகளுக்கு டிக்கெட்களை விற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த முறைகேடுகள் தொடர் பாக சிபிஐக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, கடந்த 3 நாட்களாக 8 டிராவல் ஏஜென்சிகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முறைகேடு தொடர் பாக பெங்களூருவில் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை யின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. முறைகேடுக்கு உடந்தை யாக இருந்ததாக சென்னையில் ஐஆர்சிடிசி அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நம்பிக்கையை இழக்கிறதா?
இதுதொடர்பாக சென்னை கோட்ட ரயில் பயணிகள் ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் கே.பாஸ்கர் கூறும்போது, ‘‘ரயில் டிக்கெட் முன்பதி வில் ஐஆர்சிடிசி அதிகாரிகள் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையங்களின் கவுன்ட்டர்களிலும், இணையதளத்திலும் மக்கள் வெகு நேரம் காத்திருந்து டிக்கெட்களை பெற்று வருகின்றனர். நூற்றுக் கணக்கானோருக்கு மட்டுமே டிக்கெட் கிடைக்கிறது. ஆயிரக் கணக்கான மக்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. எனவே, ஏஜென்சி களுக்கு சட்டவிரோதமாக டிக்கெட் முன்பதிவு செய்து கொடுக்கும் வகை யில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க ரயில்வே துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.