தமிழகம்

தமிழக மக்களைப் போல் காஷ்மீர் மக்களும் வாழ வேண்டாமா?- திமுகவுக்கு பாஜக அகில இந்திய செயலாளர் முரளிதரராவ் கேள்வி

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

தமிழக மக்களைப் போல் காஷ்மீர் மக்களும் வாழ வேண்டாமா? என்று பாஜக அகில இந்திய செயலாளர் முரளிதரராவ், திமுகு தலைவர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்த முரளிதரராவ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "ஒரே தேசம், ஒரே அரசியலமைப்பு சட்டம் என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளோம். இதில், அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-வை நீக்கப்பட்டதற்கான நோக்கம், காரணங்கள், அதனால், ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும் பொதுமக்களிடம் எடுத்துக்கூறப் போகிறோம்.

இதற்காக நாடு முழுவதும் 400 இடங்களில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதில், நாடு முழுவதும் பொதுமக்களை மட்டுமில்லாது அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், தொழில் முனைவோர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட 2000 முக்கிய பிரமுகர்களையும் சந்திக்க உள்ளோம்.

ஜம்மு, காஷ்மீரில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்து நடைமுறைப்படுத்தும்போது அந்த மாநிலத்தில் சிறிய வன்முறைகூட நடக்கவில்லை. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

அப்படியென்றால், அவர்களுக்கு தமிழக மக்களைப் போல் காஷ்மீர் மக்களும் வாழ வேண்டும் என்ற எண்ணமும், விருப்பமும் இல்லையா?.

காஷ்மீர் மக்களுக்கு ஜனநாயகம், இடதுக்கீடு தேவைப்படுகிறது. அங்குள்ள பட்டியலின மக்கள், தமிழக மக்களைப்போல் பயன்பெற வேண்டும். காஷ்மீர் நிலைபாட்டில் திமுக, காங்கிரஸ் பேச்சுகள், நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு உதவுவதுபோல் உள்ளது. தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பது போல் உள்ளது.

சர்வதேச அளவிலே ஈரான், குவைத், சவுதிஅரேபியா போன்ற முஸ்லிம் நாடுகள் கூட இந்தியாவின் முடிவுக்கு ஆதரவாக உள்ளன. அவர்கள், இந்த பிரச்சினைக்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

ஆனால், திமுக அரசியல் சுயலாபத்திற்காக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு நிலைப்பாடு எடுத்துள்ளது.

தமிழ் மொழி இந்தியாவிலே மிகப் பழமையான மொழி. பிரதமர் மோடிக்கு பிடித்த மொழி தமிழ். தமிழக மக்கள், இந்தியாவின் பிற மாநிலங்களுக்குச் சென்று வேலைவாய்ப்பு பெறவும், தொழில் செய்யவும் இந்தி மொழி படித்தால் உதவியாக இருக்கும் என்றுதான் சொல்கிறோம்.

தமிழக பாஜக தலைவராக புதியவர் விரைவில் நியமிக்கப்படுவார். நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கும். பாஜக போட்டியிடுமா? என்பதை கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும்" என்றார்.

SCROLL FOR NEXT