மேல் சிகிச்சைக்காக புறப்பட்டு சென்ற நெசவுத் தொழிலாளி வேல்முருகனின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த ஆட்சியர் கந்தசாமி. 
தமிழகம்

இருதய நோயால் பாதிக்கப்பட்ட நெசவுத் தொழிலாளிக்கு உதவிய திருவண்ணாமலை ஆட்சியர்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை

இருதய நோயால் பாதிக்கப்பட்ட நெசவுத் தொழிலாளிக்கு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை செய்ய திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூரில் வசிப்பவர் வேல்முருகன்(52), நெசவுத் தொழிலாளி. இவரது மகன் கோகுல் (24). இவர், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, 24 மணிநேரமும் பெற்றோரின் அரவணைப்பில் உள்ளார். இந்த நிலையில் வேல்முருகனும் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மருத்துவச் செலவுக்கு உதவி கேட்டு, ஆட்சியர் கந்தசாமியிடம் மனைவி லதா கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் மற்றும் தொண்டு நிறுவன உதவியுடன், சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை செய்துகொள்ள ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்பேரில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸில் இன்று (செப்.21) புறப்பட்ட வேல்முருகனை ஆட்சியர் வழியனுப்பி வைத்தார். அவருடன் மனைவி லதா மற்றும் மகன் கோகுல் ஆகியோர் சென்றனர். அவர்களுக்கு இதர செலவுக்காக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

வேல்முருகனுக்கு சிகிச்சை நிறைவு பெறும் வரை, சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பாதுகாக்கும் இல்லத்தில் கோகுல் தங்குவதற்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

ஆர்.தினேஷ்குமார்

SCROLL FOR NEXT