வெட்கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை, தற்போது நிறைவேறியுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள கோவை வெட் கிரைண்டர் உற்பத்தியாளர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் கோவையில்தான் வெட்கிரைண்டர்கள் பாரம்பரியமாகத் தயாரிக்கப்படுகின்றன. கோவை வெட்கிரைண்டருக்கு புவிசார் குறியீடும் கிடைத்துள்ளது. கிரைண்டர்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவற்றின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
கோவையில் மட்டும் மாதந்தோறும் சுமார் 40 ஆயிரம் வெட் கிரைண்டர்கள் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு, ஆந்திரா,தெலங்கானா, கர்நாடகா, கேரளா, வட மாநிலங்கள் மற்றும் துபாய், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் வளைகுடா நாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு கிரைண்டர் தொழிலை கடுமையாகப் பாதித்தது. முன்பு கலால் வரியாக 12.5 சதவீதமும், வாட் வரி 5 சதவீதமும் மட்டுமே விதிக்கப்பட்ட நிலையில், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது, வெட்கிரைண்டர்களுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. வரியைக் குறைக்குமாறு ஜிஎஸ்டி கவுன்சிலில் கோவை வெட்கிரைண்டர்கள் சங்கம் தொடர்ந்து முறையிட்டது. பின்னர், 28 சதவீத ஜிஎஸ்டி 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
அதேசமயம், வட மாநிலங்களில் பயன்படுத்தப்படும் ஆட்டா சக்கிக்கு 5 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டது. இட்லி, தோசை மாவு அரைக்க கோவை வெட்கிரைண்டர்கள் உபயோகப்படுத்துவதைப்போல, கோதுமையை அரைக்க வடமாநிலங்
களில் தயாரிக்கப்படும் ஆட்டா சக்கி இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. கோவை வெட்கிரைண்டருக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வட மாநில நிறுவனங்கள், ஆட்டா சக்கி இயந்திரம் மூலம் இட்லி, தோசை மாவும் அரைக்கலாம் எனத் தெரிவித்து, தென் மாநிலங்களில் ஆட்டா சக்கி இயந்திரங்களை விற்கத் தொடங்கின.
வரி குறைவு காரணமாக கோவை வெட்கிரைண்டர்களைக் காட்டிலும், ஆட்டா சக்கி இயந்திரங்களை குறைந்த விலைக்கு விற்றதால், கோவையில் தயாரிக்கப்படும் வெட்கிரைண்டர்களின் விற்பனை குறைந்தது. இதனால், கோவையில் செயல்படும் வெட்
கிரைண்டர் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகும் நிலை உருவானது. எனவே, கோவை வெட்கிரைண்டர்களுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டியே விதிக்க வேண்டும் என்று கிரைண்டர் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில், வெட்கிரைண்டர்களுக்கான வரியை 5 சதவீதமாக குறைத்து ஜிஎஸ்டி கவுன்சில் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இது தொடர்பாக கோவை வெட்கிரைண்டர்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் சாஸ்தா எம்.ராஜாவிடம் பேசினோம். “ஜிஎஸ்டி வரி விதிப்பு வெட்கிரைண்டர் தொழிலை கடுமையாகப் பாதித்தது. எனவே, வரி விதிப்பைக் குறைக்குமாறு ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து முறையிட்டு வந்தோம். ஏற்கெனவே 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதை 5 சதவீதமாக குறைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தோம். இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக முதல்வர் கே.பழனிசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தொழில் நெருக்கடியிலிருந்து மீண்டு, மீண்டும் வெட்கிரைண்டர் தொழில் மறுமலர்ச்சியடையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்றார் மகிழ்ச்சியுடன்.