தமிழகம்

மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டுமா?- பெண்களுக்கு வழிகாட்ட பிரத்தியேக  மையம்

செய்திப்பிரிவு

ஆண்களுக்கு மட்டும்தான் வேலைப்பளுவும், மன அழுத்தமும் இருக்குமா? பெண்களுக்கு இருக்காதா என்ன? உண்மையில் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் இருக்கும். இவ்வாறு மன அழுத்தத்தால் தவிக்கும் பெண்களுக்கு வழிகாட்ட கோவையில் பிரத்தியேக வழிகாட்டி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

“நாட்டிலேயே முதல்முறையாக முற்றிலும் சேவை அடிப்படையில், தொலைபேசி வாயிலாக பெண்களுக்கான கவுன்சிலிங் மையத்தை ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை தொடங்கியுள்ளது. இது குறித்து அறக்கட்டளைத் தலைவர் ஆர்.சந்திரசேகரிடம் பேசினோம்.

இயந்தரத்தனமான வாழ்க்கைச் சூழலில், மக்கள் தினமும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஆரோக்கிய குறைபாடு, சட்ட விரோத செயல்கள், சமூக அவலங்கள் என பலவற்றுக்கும் அடிப்படை மன அழுத்தம்தான். இதிலிருந்து மக்களை மீட்பது பெரும் சவாலாகும்.

தற்போதைய சூழலில், பெண்களின் வளர்ச்சிதான் தேசத்தின் வளர்ச்சியாக கருதப்படுகிறது. கல்வி, வேலைவாய்ப்பில் பெண்கள் வேகமாக வளர்ந்து வருகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணத்தையும், பதவியையும் சம்பாதிக்க வேண்டிய நிலையில், பெண்கள் மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதன் விளைவு, சமுதாயத்தின் பல்வேறு நிலைகளிலும் எதிரொலிக்கிறது.

எனவே, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சமுதாயம் உருவாக பெண்களுக்கு வழிகாட்டுதல் அவசியமாகிறது. எனவே, சிறந்த உளவியல் நிபுணர்களைக் கொண்டு, பெண்களுக்கு கவுன்சிலிங் அளிக்க முடிவு செய்தோம். இதற்காக உளவியல் நிபுணர் எம்.எஸ்.கே.முகைதீன் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் நிபுணர்களின் குழுவை அமைத்துள்ளோம். திருமணம் சார்ந்த பிரச்சினைகள், பாலியல் சீண்டல்களால் ஏற்படும் பிரச்சினைகள், தனிமை உணர்வால் ஏற்படும் பிரச்சினைகள், மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றுக்கு முற்றிலும் இலவசமாக ஆலோசனை வழங்கப்படும்.

மன அழுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு, தற்கொலை எண்ணம் தோன்றும் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் அளிக்கப்படும். இதுகுறித்த வழிகாட்டுதல்களை பெற 75300 45670, 75300 45671 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்” என்றார்.

SCROLL FOR NEXT