தமிழகம்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10 கோடி அரசு நிலம் மீட்பு: 20 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுப்பணித்துறை நடவடிக்கை

செய்திப்பிரிவு

மதுரை

மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் எதிரே கடந்த 20 ஆண்டுகளாக தனியார் நிறுவனங்கள் கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமித்து வைத்திருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள பொதுப்பணித்துறை நிலம், இன்று(வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டது. அந்த நிலத்தில் கட்டிய கட்டிடங்கள் அதிரடியாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ஏராளமான ஹோட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் கூடிய ஸ்டார் ஹோட்டல்கள் உள்ளன.

இந்த நிறுவனங்களுக்கு பார்க்கிங் வசதியே இல்லை. இந்தக் கடைகள், ஹோட்டல்களுக்கு வருவோர், தங்கள் கார், இரு சக்கர வானகங்களை சாலையோரம் உள்ள நடைபாதைகளில் நிறுத்திச் செல்கின்றனர். சில நிறுவனங்கள் இந்த நடைபாதைகளை ஆக்கிரமித்து 'பார்க்கிங்' அமைத்துள்ளனர்.

அதனால், மாட்டுத்தாவணி சிக்னல் சந்திப்பில் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே உள்ளது.

சாலையோர பெட்டிக்கடைக்காரர்களையும், தள்ளுவண்டி வியாபாரிகளையும் சட்டத்தின்படி கடுமையாக நடந்து கொள்ளும் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீஸார் மாட்டுத்தாவணி பெரும் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள இந்த இடங்களை கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பஸ்நிலையம் எதிரே உள்ள பெரிய ஹோட்டல் நிறுவனங்கள் சில, தங்கள் ஹோட்டல்களின் பின்புறத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து பகிரங்மாக கட்டிடம் கட்டி நிரந்தரமாக தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்தனர். பொதுப்பணித்துறையும், அந்த இடம் தங்களுக்கு சொந்தமான இடம்தான் என்று கூறி அந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றவோ, இடிக்கவோ முயற்சிக்கவில்லை.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றி அந்த நிலத்தை மீட்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியம் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஜேசிபி ஏந்திரங்களை கொண்டு கட்டிடங்களையும், காம்பவுண்ட் சுவர்களையும் இடித்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகு பொதுப்பணித்துறை அந்த இடத்தில் தங்கள் இடம் என்பதற்கான அறிவிப்பு பலகை வைத்தனர். 20 ஆண்டுகளுக்கு[ பிறகு மீட்கப்பட்ட இந்த இடம் அமைந்துள்ள மாட்டுத்தாவணி பஸ்நிலையம் பகுதியில் ஒரு சென்ட் சுமார் ரூ.50 லட்சம் வரை விற்பனையாவதால் மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.10 கோடி இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாயமான தல்லாபுதுக்குளம்

மாட்டுத்தாவணி பஸ்நிலையம் எதிரே 30 ஆண்டுகளுக்கு முன்னால் தல்லாபுதுகுளம் கண்மாய் இருந்தது. 20 ஹெக்டேர் இருந்த இந்த கண்மாய் இப்போது இருந்த இடம் தெரியாமல் மாயாகிவிட்டது.

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த கண்மாய் நிலத்தில்தான் அரசு 3 சமூக மக்களுக்கு சுடுகாடுகளுக்கு இடம் ஒதுக்கியுள்ளது. குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம், தொழில் நலத்துறை அலுவலகம், உயர் நீதிமன்றம் ஊழியர்கள் குடியிருப்பு, சட்டக்கல்லூரி விடுதி கட்டப்பட்டுள்ளது.

வனத்துறை மற்றும் பிஎஸ்எஸ் அலுவலகத்திற்கும் இடம் ஒதுக்கியுள்ளனர். தற்போது வெறும் 5.86 ஹேக்டேர் நிலம் மட்டுமே உள்ளது. இந்த கண்மாயின் நீர் வரத்து கால்வாய்கள் நகர விரிவாக்கத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிட்டதால் தற்போது இந்த 5.86 ஹெக்டேர் கண்மாய் நிலம் காலிமனையாகவே உள்ளது.

இந்த இடத்தையும் தனியார் படிபடியாக ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT