அமைச்சர் விஜயபாஸ்கர்: கோப்புப்படம் 
தமிழகம்

நீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: தேசிய தேர்வு முகமை தான் பதிலளிக்க வேண்டும்; அமைச்சர் விஜயபாஸ்கர்

செய்திப்பிரிவு

சென்னை

நீட் நுழைவுத்தேர்வை மத்திய அரசுதான் நடத்துகிறது. ஆள்மாறாட்டம் குறித்து தேசிய தேர்வு முகமை தான் பதிலளிக்க வேண்டும் என, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தேனி மருத்துவக் கல்லூரியில் இந்தக் கல்வியாண்டில் சேர்ந்த சென்னை மாணவர் உதித் நாராயணன் என்பவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சர்ச்சை கிளம்பியதையடுத்து, அவரிடம் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதையடுத்து, விசாரணையில் அவர் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியானது.

இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று (செப்.20) நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆள்மாறாட்டம் நடந்துள்ளதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி டீனுக்கு மின்னஞ்சல் வந்ததாகவும், அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட மாணவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார்.

"ஆள்மாறாட்டம் குறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி டீனுக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இதையடுத்து, கல்லூரி டீன் உடனடியாக அந்த மின்னஞ்சலை மருத்துவக் கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ளார். இதன்பின், மருத்துக் கல்லூரி டீன் சம்பந்தப்பட்ட மாணவரிடம் விசாரணை நடத்த மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டது.

விசாரணையின் போதே, தனக்கு மன உளைச்சல் இருப்பதாக சம்பந்தப்பட்ட மாணவர் கல்லூரியில் இருந்து நின்றுவிட்டார். இதுகுறித்து, கல்லூரி டீன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது காவல்துறை விசாரணையில் உள்ளது.

நீட் நுழைவுத்தேர்வை மத்திய அரசுதான் நடத்துகிறது. ஆள்மாறாட்டம் குறித்து தேசிய தேர்வு முகமை தான் பதிலளிக்க வேண்டும்" என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT