சென்னை
தலைமை நீதிபதி பணியிட மாற்றப் பரிந்துரையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகலாய உயர் நீதிமன்றத்துக்கு மாற்றும் கொலீஜியத்தின் பரிந்துரையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்து நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் இன்று (செப்.20) விசாரணைக்கு வந்தது
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 2010-ம் ஆண்டு ஆளுநர் ஒருவர் மாற்றம் செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யபட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் தனி நபர்கள் வழக்கு தொடரலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அரசியல் சாசனம் 222-வது பிரிவில் நீதிபதிகளைப் பணியிட மாற்றம் செய்வதைக் குறித்து கூறப்பட்டுள்ளதே தவிர தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்வதைப் பற்றி கூறப்படவில்லை என வாதிட்டார்.
நீதிபதிகள் நியமனம் பணியிட மாற்றம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் சேர்ந்து தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் தலைமை நீதிபதி தஹில் ரமானியை இடமாற்றம் செய்தது நியாமற்றது எனவும் வாதிட்டார்.
அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், பாதிக்கப்பட்டதாகக் கருதும் நீதிபதிகள் தான் வழக்கு தொடர முடியும் எனவும் மற்றவர்கள் வழக்கு தொடர முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டினர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றத்தால் திருத்தி அமைக்க முடியாது என்றும் தெரிவித்த நீதிபதிகள், "தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் சமமானவர்கள்தான். நிர்வாக ரீதியில் மட்டுமே ஒருவர் உயர் பதவியான தலைமை நீதிபதி பதவியை வகிக்கிறார். அந்த வகையில் பணியிட மாற்றம் செய்யலாம்," என அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்படடுள்ளதாக நீதிபதிகள் விளக்கம் அளித்து, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா இல்லையா எனபது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.