தமிழகம்

பிரதமர் மோடி, சீன அதிபர் தமிழகம் வருகை: மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு

செய்திப்பிரிவு

சென்னை

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வருவதையொட்டி, மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இந்தியா வர உள்ளார். இரு தலைவர்களின் சந்திப்பு, காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. மேலும், பாரதப் பிரதமரும், சீன அதிபரும் கோவளம் பகுதியில் உள்ள பிஷர்மேன் கோவ் ரிசார்ட் என்ற நட்சத்திர சொகுசு விடுதியில் தங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், கோவளம் பகுதியில் உளள சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் போலீஸார் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, புராதனச் சின்னங்கள் நிறைந்த மாமல்லபுரத்தில் சீன பாதுகாப்பு அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழக சுற்றுலா அதிகாரிகள், உள்துறை உயரதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் உடன் இருந்தனர்.

மாமல்லபுரத்தில் இரு தலைவர்களின் வருகையின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காகவும், சாலைகளில் இடையூறு ஏற்படுவதை தடுப்பதற்காகவும், சாலையோர ஆக்கிரமிப்புகள், ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT