கமல்ஹாசன் 
தமிழகம்

ரகுக்களும் சுபஸ்ரீக்களும் அரசாங்கத்தின் அலட்சியத்தால் கொல்லப்பட்டனர்: கமல்ஹாசன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை

சுபஸ்ரீயின் மரணம் அரசாங்கத்தின் அலட்சியத்தால் நடைபெற்ற கொலை என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த வாரம், சென்னையில் பேனர் விபத்தால் 23 வயது சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இச்சம்பவம், தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், கமல்ஹாசன், இம்மாதிரியான தவறுகளை மக்கள் தட்டிக் கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் அலட்சியக் கொலைகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்த வைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும்," எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், அதே பதிவில் வெளியிட்டுள்ள வீடியோவில் கமல்ஹாசன் பேசியதாவது:

"உலகத்தில் மிகக் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா? வாழ வேண்டிய பிள்ளைகளின் மரணச் செய்தியை பெற்றவர்களிடம் சொல்வது தான். சுபஸ்ரீயின் மரணச் செய்தியும் அப்படிப்பட்டது தான். தன் மகளின் ரத்தம் சாலையில் சிந்திக் கிடப்பதைப் பார்க்கும்போது, பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோரின் மனதிலும் திகிலும் மரண வலியும் கண்டிப்பாக வரும். பெண்களைப் பெற்றவன் என்கிற முறையில் எனக்கும் அப்படித்தான் இருந்தது.

இந்த மாதிரி பல ரகுக்கள், சுபஸ்ரீக்களும் அரசங்கத்தின் அலட்சியத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர். கொஞ்சம் அறிவு வேண்டாமா? எங்கு பேனர் வைக்க வேண்டும், எங்கு வைக்கக் கூடாது என உங்களுக்குத் தெரியாது? இவர்களைப் போன்ற அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ?

எதிர்த்துக் கேள்விக் கேட்டால் ஏறி மிதிக்கின்றனர். தவறைக் கேள்வி கேட்டால் நாக்கை அறுப்பேன் என மிரட்டுவதுதானே இவர்களுக்குத் தெரிந்த அரசியல். இம்மாதிரியான ஆட்களின் மீது எனக்கு நூலிழை அளவு கூட மரியாதையும் பயமும் கிடையாது. ஒருவேளை உங்களுக்கு பயமிருந்தால் என் கையைப் பிடித்துக்கொள்ளுங்கள். மக்கள் நீதி மய்யம் உங்கள் சார்பாக, தவறுகளைத் தட்டிக்கேட்டு தீர்வும் தேடித்தர முற்படும்.

"எங்களை ஆள்பவர்களை நாங்கள் தான் தேர்வு செய்வோம். ஆனால், நாங்கள் காலம் முழுவதும் அடிமையாகத்தான் இருப்போம், என்று சொன்னால், அதைவிட மூடத்தனம் எதுவும் கிடையாது. உங்களை 'சாதாரண மக்கள், சாதாரண மக்கள்' என்று சொல்லிச் சொல்லியே அடிமையாகவே என்றும் வைத்திருக்கிறார்கள். இந்த சாதாரண மக்கள் தான் அசாதாரணமான தலைவர்களை உருவாக்குகிறார்கள் என்பதை நான் திண்ணமாக நம்புகிறேன். வாருங்கள், தவறுகளைத் தட்டிக் கேட்போம், புதிய தலைமையை உருவாக்குவோம்,"

இவ்வாறு அந்த வீடியோவில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த ரகு, கடந்த 2018-ம் ஆண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த வளைவில் மோதி உயிரிழந்ததவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT