சென்னை
படத்தை நீண்ட நாட்களுக்கு ஓட்டுவதற்காக நடிகர் விஜய் அரசியல் பேசுவதாக, அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் நேற்று (செப்.20) நடைபெற்ற 'பிகில்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், "பேனர் விபத்தில் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என் ஆறுதல். இது போன்ற சமூகப் பிரச்சினைக்கு ஹேஷ்டேக் போடுங்கள். சமூகப் பிரச்சினையில் கவனம் செலுத்துங்கள். இங்கு யாரைக் கைது செய்ய வேண்டுமோ, அவர்களை விட்டு விடுகிறார்கள். போஸ்டர் பிரிண்ட் செய்த கடைக்காரரைக் கைது செய்கிறார்கள்," என்று பேசினார்.
விஜய்யின் இந்தப் பேச்சுக்கு அதிமுக தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன், "தற்போது திரைப்படங்கள் 20 நாட்கள் ஓடுவதே சிரமமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் திரைப்படங்களைப் பரபரப்புக்குள்ளாக்குவதும் அதேசமயத்தில் அப்படத்தின் பெயரை வெகுஜன மக்களிடையே கொண்டு செல்வதற்கும், பரபரப்பு அரசியல் தேவைப்படுகிறது.
சமீபகாலத்தில் திரைத்துறைக்கும் இதுபோன்ற பரபரப்பு அரசியல் தொற்றிக்கொண்டுள்ளது. ஒரு காலத்தில் கதையை நம்பி படம் எடுத்தார்கள். அந்தக் கதையின் வலுவான கட்டமைப்பால், அத்திரைப்படம் நீண்ட நெடிய நாட்களுக்கு, சற்று ஏறக்குறைய ஓராண்டுக்கெல்லாம் திரைப்படம் ஓடியிருக்கிறது. தற்போது கதையே இல்லாத திரைப்படத்தை எடுத்துவிட்டு, எப்படியாவது ஒரு மாதம், இரண்டு மாதங்களுக்கு ஓட்டிவிட வேண்டும் எண்ணத்தில் பரபரப்புக்கு உள்ளாக்குகின்றனர்.
அதனால் தான் இதுபோன்ற திரைப்பட விழாக்களில், இசை வெளியீட்டு விழாவில் இத்தகைய அரசியலைப் பேசி அதன் மூலமாக தன்னுடைய திரைப்படத்தை ஓட்டுவதற்கான அரசியல் செய்து வருகின்றனர். அவற்றில் பல நடிகர்கள் இருக்கின்றனர். அவர்களில் விஜய் குறிப்பிடத்தக்கவர். அவரின் திரைப்படங்கள் அப்படித்தான் ஓடுகின்றன.
சுபஸ்ரீ விவகாரத்தில் அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது. யாரை எங்கு வைக்க வேண்டும் என்பதையெல்லாம் விஜய் குறிப்பிட்டிருக்கிறார். யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்குதான் தமிழக மக்கள் வைத்திருக்கின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா முதல் இன்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வரை எங்களுக்கு மக்கள் வெற்றியைத் தந்திருக்கின்றனர். அதிமுக ஆட்சி தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறது".
இவ்வாறு வைகைச்செல்வன் தெரிவித்தார்.