சென்னை
சுபஸ்ரீ மரணத்தில் கைது குறித்து நடிகர் விஜய் நேற்று 'பிகில்' பட இசை வெளியீட்டு விழாவில் பேசியதை, 'சரியான நேரத்தில் நியாயத்திற்கு குரல் கொடுத்தார் தம்பி விஜய்’ என கமல் பாராட்டியுள்ளார்.
நேற்று 'பிகில்’ பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய், '' பேனர் விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட வேண்டியவர்களை விட்டுவிட்டு பேனர் பிரிண்ட் செய்த நபரைக் கைது செய்கிறார்கள்'' என்று விமர்சனம் செய்தார்.
இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாகக் கூறும்போது, “தாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்கப்படாது. பொதுவான மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. விபத்தின் மூலம் கிடைத்த மொழி ஆங்கிலமாக இருந்தாலும் நன்மையாக அமைந்தது ஆங்கிலம். அடிமையாக இருந்த போதிலும் ஆங்கிலத்தை வைத்து நாம் வேறு கருவி செய்துகொண்டோம்.
எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மூன்று ஆண்டு விலக்கு கொடுத்ததன் மூலம் மூன்று ஆண்டுகளைக் கடத்துவார்கள் எனத் தோன்றுகிறது. கல்வித் துறையில் சீரிய திட்டங்கள் கொண்டு வர வேண்டும்.
‘யாரைக் கைது செய்ய வேண்டுமோ அவரை விட்டுவிட்டு, பேனர் பிரிண்ட் செய்த கடைக்காரரை கைது செய்கின்றனர் ’என்று நடிகர் விஜய் பேசியது சரியான நேரத்தில் சரியான மேடையில், நியாத்திற்காக குரல் கொடுத்த தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.