தமிழின் பெருமைகளை பிரதமர் வரை கொண்டு செல்வோம் என்று தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இதைப் பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரிகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து மத்திய தொல்லியல் துறை 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்திக் கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய்வு, கடந்த ஜூன் 13-ம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. கீழடி நாகரிகம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு இன்று பேட்டியளித்த அமைச்சர் பாண்டியராஜன், ''கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுகள் அடுத்த மாதத்தில் முடிந்துவிடும். அடுத்தகட்ட ஆய்வுகள் கண்டிப்பாக நடக்கும். அதை இன்னும் கொஞ்சம் ஆழமாக, உலகப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செய்ய ஆசைப்படுகிறோம். அதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. அதே நேரத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்துடனும் இணைந்து பணியாற்றுவோம்.
கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கீழடி நாகரிகம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் நூலும் வெளியிடப்பட்டுள்ளது. பண்பாட்டு அமைச்சர் உதவியுடன் இதை பிரதமர் வரை எடுத்துச் செல்வோம். நமது முதல்வர் மூலமாக, அதிகாரபூர்வமாக பிரதமர் மோடியின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும்.
தமிழர் நாகரிகம் என்பது ஒருவகையில் பாரதத்தின் நாகரிகம்தான். பாரதத்தின் பழம்பெருமை பெற்ற மாமல்லபுரத்தில் இருந்து பிரதமர் மோடி, சீனப் பிரதமருடன் உரையாற்ற உள்ளார். கீழடியின் பெருமைகளை அவர் கண்டிப்பாக மனதில் வைத்துக் கொள்வார் என்று நம்புகிறோம். தமிழின் பெருமைகளை பிரதமர் வரை கொண்டு செல்வோம்'' என்றார் அமைச்சர் பாண்டியராஜன்.