தமிழகம்

வயிற்றுக்குள் இறந்த 2 கன்றுகளுடன் அவதிப்பட்ட பசு: சிசேரியன் மூலம் அகற்றி உயிரைக் காப்பாற்றிய மதுரை அரசு கால்நடை மருத்துவர்கள்

சுப.ஜனநாயக செல்வம்

மதுரை

வயிற்றுக்குள்ளேயே 2 கன்றுகள் இறந்தநிலையில் வீங்கிய வயிற்றுடன் அவதிப்பட்ட பசு மாட்டுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து கன்றுகளை வெளியே எடுத்ததுடன் தாய்ப் பசுவின் உயிரையும் காப்பாற்றியுள்ளனர் மதுரை அரசு கால்நடை மருத்துவர்கள்.

மதுரை வடக்கு மாசி வீதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி உமாமகேஸ்வரி. இவர் வீட்டில் 5 கலப்பின பசு மாடுகள் வளர்த்து வருகிறார். இதில் 6 வயதுடைய பசுமாடு முதலாவதாக ஒரு கன்று ஈன்றது. 2 வது முறையாக 3 கன்றுகள் ஈன்றது. 3வது முறை 2 கன்றுகள் ஈன்றது.

அடுத்து 4வது முறையாக சினையாக இருந்தது. வயிறு பெரிதாக இருந்ததால் 2 கன்றுகள் ஈனும் என எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பனிக்குடம் உடைந்து பலமணி நேரமாகியும் கன்றுகள் வெளிவராமல் இருந்ததால் அதிர்ந்தனர். வயிற்றுக்குள் கன்றுகள் இறந்ததால் வயிறு பெரிதாகவும் வீங்கி தாய் மாட்டின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.

பசுமாட்டை காப்பாற்றும் வகையில் மதுரையில் உள்ள அரசு கால்நடை பன்முக மருத்துவமனைக்கு வாகனத்தில் கொண்டு வந்தனர். அங்கு பன்முக மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கே.வைரவசாமி தலைமையிலான குழுவினர் பசுமாட்டைப் பரிசோதித்தனர்.

வயிற்றுக்குள் 2 கன்றுக்குட்டிகள் இறந்த நிலையில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். கால்நடை உதவி மருத்துவர்கள் செந்தில் செல்வக்குமார், விஜயகுமார், அறிவழகன், முத்துராமன், முத்துராம் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து வயிற்றுக்குள் இறந்த 2 கன்றுகளை அகற்றி, தாய்ப் பசுவைக் காப்பாற்றினர்.

இதுகுறித்து, கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குநர் டி.சுரேஷ் கிறிஸ்டோபர், ”உமாமகேஸ்வரி வளர்த்த பசுமாடு, இரட்டைக் கருவை உருவாக்கும் தன்மை கொண்டிருந்ததால் தொடர்ந்து 2 கன்றுகள் ஈன்றது. தற்போதும் சினை பிடித்து 2 கன்றுகள் இருந்துள்ளன.

மருத்துவரல்லாத பணியாளர்களிடம் சிகிச்சை அளித்ததால் பனிக்குடம் உடைந்து 2 கன்றுகள் இறந்துள்ளன. பிரசவிக்கமுடியாமல் இறப்பதை டிஸ்டோசியா (dystocia) என்பர். மேலும் கன்றுகளின் கழுத்து வளைந்தும், கால்கள் திரும்பியும் இருந்ததால் கன்றுகள் வெளியேறவில்லை.

இறந்த கன்றுகளின் உடல்கள் வீங்கியதால் பசுமாட்டிற்கும் வயிறு பெரிதானது. மேலும் இறந்த கன்றுகளிலிருந்து வெளியேறிய நச்சுக்கிருமிகள் பரவத் தொடங்கியதால் தாய்ப்பசுவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.

மருத்துவக் குழுவினர் துரிதமாக செயல்பட்டு சிசேரியன் மூலம் வயிற்றுக்குள் இறந்த 2 கன்றுகள் அகற்றப்பட்டதால் பசுமாட்டின் உயிர் காப்பாற்றப்பட்டது.

தொடர்ந்து ஒரு வாரம் கண்காணிக்கப்பட்டு குணமடைந்தவுடன் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

அதேபோல் நேற்று மாலை கொண்டுவரப்பட்ட தாயும், கன்றும் காப்பாற்றப்பட்டன. எனவே கால்நடை வளர்ப்போர், கால்நடைகளுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர்களை அணுகினால் எவ்வித பாதிப்பின்றியும் காப்பாற்றிவிடலாம்” என்றார்.

SCROLL FOR NEXT