ஆண்டிபட்டி
குஸ்கா, பிரியாணிக்காக சிறப்பு நெல்ரகத்தை வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் உருவாக்கி உள்ளது. கூடுதல் வாசனை, உதிரித் தன்மை, சுவையுடன் சீரகச் சம்பாவுக்கு மாற்றாக இந்த ரக அரிசி விளைவிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை.யின் கீழ் மாநிலம் முழுவதும் 40 ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன. இதில் வைகை அணையில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் விஜிடி-1 எனும் பிரியாணி ரக அரிசி உருவாக்கப்பட்டுள்ளது. பிரியாணிக்கு பெரும்பாலும் சீரகச் சம்பா, பாசுமதி ரகங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சீரகச் சம்பா பாரம்பரிய ரகம். பாசுமதி வெளிமாநிலங்களில் இருந்து வருகிறது. இருப்பினும், இதில் மணம், சுவை குறைவு என்பதால் பலரும் விரும்புவ தில்லை.
இந்நிலையில் குஸ்கா, பிரியாணிக்கென புதிய ரக அரிசியை உருவாக்க, வைகை அணை ஆராய்ச்சி மையத்தில் 10 ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, ஆடுதுறையையும், சீரகச் சம்பாவையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ரக நெல் 130 நாட்களில் மகசூல் தரும். ஒரு ஹெக்டேருக்கு 5,860 கிலோ கிடைக்கிறது.
இதுகுறித்து ஆராய்ச்சி நிலையத் தலைவர் ஜூலியட் ஹெப்சியா கூறியது: சீரகச்சம்பா வில் உள்ள சில இடர்பாடுகளை களைந்து இந்த ரகம் உருவாக்கப் பட்டுள்ளது. இதனை பல்வேறு ஆராய்ச்சி மையங்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட 101 இடங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
விளைந்த அரிசியை தமிழ கத்தின் பல்வேறு பிரபல ஓட்டல்களுக்கு அனுப்பி சமைத்து வாடிக்கையாளர்களின் கருத்துகளை கேட்டறிந்தோம். சீரகச் சம்பாவை விட 32 சதவீதம் கூடுதல் மகசூல் திறன் கொண்டது. சமைக்கும்போது அரிசி பக்கவாட்டில் விரிவடையும்.
ஆனால், இந்த ரகம் நீளவாக்கில் விரிவடையும். நோய் தாக்குதல்களை எதிர் கொள்ளக் கூடியது. மிருதுவாக, உதிரித் தன்மையுடன் இருக்கும். விவசாயி களுக்கு ரூ.22 வரை விலை கிடைக் கும். தற்போது இந்த மையத்தில் 1.5 டன் அரிசி இருப்பு உள்ளது என்றார். விவசாயிகளுக்கும் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. உதவிப் பேராசிரியர்கள் ஜெய ராமச்சந்திரன், மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.