சென்னை
சென்னையில் முறையாகச் செயல்படாத மழைநீர் வடிகால்களால், தண்ணீர் தேங்கியதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று இரவு முதல் சென்னை உட்பட திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது.
அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை விட்டுவிட்டுப் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மழைநீர் வடிகால்கள் சரியாகச் செயல்படாததால், கதீட்ரல் சாலை, எழும்பூர், வேப்பேரி, பூந்தமல்லி, ஜி.பி.சாலை உள்ளிட்ட ஏராளமான இடங்களில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் பெய்த ஒருநாள் மழைக்கே எழும்பூர் ,கெங்கு ரெட்டி பாலம் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகினர்.
அதேபோல அடையாறு, தேனாம்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில், அதிக இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சென்னையில் சுமார் 480 இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாக மாநகராட்சி கண்டறிந்துள்ளது.
பட்டாளம், ஸ்ட்ராஹான்ஸ் சாலை
மழைநீர் வடிகால்
மழைநீர் நிலத்தில் தேங்காமல், வடிந்து செல்லவே வடிகால்கள் அமைக்கப்படுகின்றன. இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்று கூறப்படுகிறது. ஆனால் சென்னையில் உள்ள பெரும்பாலான வடிகால்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால் அவற்றின் வழியே தண்ணீர் செல்வதில்லை.
இதனால் தேங்கி நிற்கும் மழைநீர் கழிவுநீராக மாறி, பொதுமக்களின் பயணத்தைப் பாதிப்பதோடு, சுகாதாரப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.
இடம்: எழும்பூர்
சென்னை மாநகராட்சி விழித்துக்கொள்ளுமா?
சென்னை மாநகராட்சி சார்பில் 1,894 கி.மீ நீளத்தில், 7 ஆயிரத்து 351 மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவை முறையான பரிமாரிப்பில் இருக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
மழைநீர் வடிகால்வாய்கள் சரியாகச் சுத்தம் செய்யப்படாததால் சுமார் 5 அடி ஆழம் வரை மாசு படிந்துவிடுகிறது. அதேபோல நகரில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களில் பெரும்பாலானவற்றில் கழிவுநீர் கலப்பதால் வருடம் முழுவதும் மழைநீர் வடிகால்கள் நிரம்பி ஓடுகின்றன. இதனால் மழைக் காலத்தில் மழைநீர், ஆறுகளில் சென்றடைவது தடைபடுகிறது.
கழிவு நீர் தேங்கி நிற்கும் வடிகால்
மழைநீர் வடிகால்களையும் மழைநீர் கால்வாய்களையும் அரசு உரிய முறையில் பராமரிக்க வேண்டும். சென்னை மாநாகராட்சி இந்த விவகாரத்தில் உடனடியாக விழித்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.