தமிழகம்

ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: நெல்லை கலெக்டர் எச்சரிக்கை

அருள்தாசன்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த 9.9.2019 -ம் தேதி மக்கள் குறை தீர்க்கும் நாள் நடைபெற்று கொண்டிருக்கும்போது பகல் 12 மணியலவில் பாளையங்கோட்டை இலந்தைகுளம் பகுதியை சேர்ந்த பூ.சண்முகசுந்தரம் (21) என்பவர் அரசு வேலை வேண்டி பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதுபோல் நேற்று (17.09.2019) மானூர் அருகே உள்ள வாள்வீச்சு ரஸ்தா பகுதியைச் சார்ந்த த.பெ.சண்முகம் என்பவர் இடப்பிரச்சினை காரணமாக தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இது போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும் எனவே அவர்கள் மீது காவல் துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு வருவது அருகில் உள்ளவர்களுடைய உயிருக்கும் உடமைக்கும் தீங்கு ஏற்படுத்தகூடிய வகையில் உள்ளது.

மேலும் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு வரும் பொது மக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பீதியை ஏற்படுத்துகிறது.

தங்கள் சொந்த பிரச்சனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபடு உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் மனு செய்தாலே போதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT