சென்னை
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழை பெய்யும் எனவும் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (செப்.18) சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் அதிகபட்சமாக 15 செ.மீ., அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் திருச்சி மாவட்டம் புள்ளம்பட்டியில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வட தமிழகம் மற்றும் புதுவை கடற்கரைப் பகுதியில் காற்று மணிக்கு 40 கிலோ மீட்டரில் இருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் எச்சரிக்கப்படுகிறார்கள்".
இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.