தமிழகம்

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வில் இருந்து 3 ஆண்டுகள் விலக்கு ஏன்?- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை

கல்வித்தரத்தை உயர்த்தவே பொதுத்தேர்வுகளுக்கு 3 ஆண்டு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ''மாணவர்களின் திறனை மேம்படுத்தவே 3 ஆண்டு கால அவகாசத்தை அளித்திருக்கிறோம். இப்போது கருத்துகள் சொல்கிற அனைவரும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு எழுதித்தான் இந்த நிலையில் உள்ளனர்.

உலக நாடுகளில் வளர்ந்து வருகிற கல்வி முறைக்கும் நமது கல்விமுறைக்கும் இடைவெளி இருக்கிறது. இதை மத்திய அரசு உணர்ந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது பெற்றோரும் மாணவர்களும் வரவேற்க வேண்டிய ஒன்று. இதனால் இடைநிற்றல் என்பதல்ல, மாணவர்களை நல்ல கல்வியாளர்களாகக் கொண்டு வரவேண்டும் என்பதே நோக்கம்.

நாம் மற்ற மாநிலங்களோடு போட்டி போட வேண்டியுள்ளது. மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மாணவர்களின் தரம் மேலும் மேலும் உயரவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டு காலத்தைப் பயன்படுத்தி, மாணவர்களின் கற்றல் திறனும் ஆசிரியர்களின் கற்பித்தல் முறையும் மேம்பட வேண்டும்'' என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்வதால் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது எனவும், புதிய சட்டத் திருத்தப்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடத்த வேண்டும் எனவும் மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

இந்தச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்த தமிழக அரசும் முடிவு செய்தது. இதற்கு அரசியல் கட்சிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து தமிழகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டு வரப்படாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி அறிவித்தார்.

இதற்கிடையே மத்திய அரசின் ஆணைப்படி, நடப்புக் கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை செப். 13-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT