சென்னை
சென்னை சிட்லப்பாக்கத்தில் லாரி மோதியதாலேயே மின்கம்பம் விழுந்து சேதுராஜ் உயிரிழந்தார் என, மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சிட்லப்பாக்கத்தில் சேதுராஜ் என்பவர், கடந்த 16-ம் தேதி இரவு மின்கம்பம் விழுந்ததில் உயிரிழந்தார். இதற்கு, மின்வாரியத்தின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் தங்கமணி இன்று (செப்.18) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"மின்கம்பம் விழுந்து விபத்து நடந்திருப்பதாகத்தான் எங்களுக்குச் செய்தி வந்திருக்கிறது. அதன் புகைப்படமும் வந்திருக்கிறது. மரத்தின் கிளை மின்வயரில் பட்டு மின்சாரக் கசிவு ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மூன்று நாட்களுக்கு முன்பாக, அப்பகுதியில் பழுதான மின்கம்பம் மாற்றப்பட்டது. மின்கம்பம் பழுதடைந்து அதனை மின்சார வாரியம் கவனிக்கவில்லை என்ற செய்தி தவறானது. எந்தப் பகுதியில் இருந்து புகார் வந்தாலும், அதனை மின்சார ஊழியர்கள் உடனடியாக மாற்றிவிடுகிறார்கள். எனக்கும் இதுகுரித்து புகார் வரும். எனது வீட்டுக்கும் தொடர்புகொண்டு புகார் அளிப்பார்கள்.
விழுந்த மின்கம்பம் சிறிதும் சேதாரமில்லாமல் நன்றாகத்தான் இருக்கிறது. அது பழுதாக இருக்கிறது என்று பொதுமக்கள் புகார் அளித்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம். லாரி மோதியதால் மின்கம்பம் விழுந்திருக்கலாம் என்பது எங்கள் யூகம். சிசிடிவி காட்சி அடிப்படையில் எந்த லாரி என்பதைக் கண்டுபிடிக்குமாறு, காவல் துறையினரிடம் சொல்லியிருக்கிறோம். அதன்பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். எப்படியிருந்தாலும், சேதுராஜ் இறந்தது வருந்தத்தக்க சம்பவம்.
மழைக்காலமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம். முகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம், மாநகராட்சியின் மின்விளக்குக் கம்பத்தால் நிகழ்ந்தது. மின்சார வாரியம் காரணமல்ல. மின்சார வாரியமாக இருந்தாலும், மாநகராட்சியாக இருந்தாலும் அரசுதான் பொறுப்பு. அதில், மாற்றுக் கருத்தில்லை.
மாநகராட்சியைப் பொறுத்தவரை புதைவடக் கேபிள்கள் அதிகம் இருக்கின்றன. மாநகராட்சியோ, குடிநீர் வாரியமோ சாலையில் புதைவடக் கேபிள்கள் அமைப்பதால் தான் இத்தகைய விபத்துகள் நடைபெறுகின்றன. அவ்வாறு செய்பவர்களுக்கு ரூ.50, 60 லட்சம் என லட்சக்கணக்கில் அபராதம் வசூலித்திருக்கிறோம். வருங்காலத்தில் இத்தகைய விபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்போம். இதுவரை 6,268 மின்கம்பங்களை மாற்றியிருக்கிறோம். புகார்களின் அடிப்படையில் இன்னும் 2,238 மின்கம்பங்கள் தான் மாற்றப்பட வேண்டும். அந்தப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகின்றன. பொதுமக்கள் பழுதான மின்கம்பங்கள் குறித்து மின்சார வாரியத்திடம் புகார் அளிக்க வேண்டும்.
இத்தகைய விபத்துகளில் எங்கள் மீது தவறு இருந்தால் நிச்சயம் பொறுப்பேற்றுக்கொள்வோம். பழுதான மின்கம்பங்களை மாற்றுவதில் தாமதம் என்ற தகவல் தவறானது. மின்சார வாரியத்தில் ஆள்பற்றாக்குறை இருக்கிறது என்பதும் தவறான தகவல்".
இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.