திருச்சி
திருச்சி மாநகரில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை பாரதி தெருவைச் சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி உமா(55). நேற்று முன்தினம் அதிகாலையில் திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இருந்து இருவரும் இருசக்கர வாகனத்தில் சோமரசம்பேட்டைக்குப் புறப்பட்டனர். தலைமை தபால் நிலைய சிக்னல் பகுதியில் சென்றபோது அவ்வழியாக மற்றொரு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர், உமா அணிந்திருந்த ஆறரை பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சந்திரன். இவரது மனைவி அமுதவள்ளி(46). இவர் நேற்று முன்தினம் இரவு தனது கணவருடன் ஐயப்பன் கோயில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர், அமுதவள்ளி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார். தங்கச் சங்கிலி அறுபடாத நிலையில், அமுதவள்ளி நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் அவரது தலை மற்றும் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரன், தனது மனைவியை உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். இதுகுறித்து செஷன்ஸ் கோர்ட் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாநகரின் அனைத்து பிரதான சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையிலும், கடந்த சில நாட்களாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.