எஸ்.கே.ரமேஷ்
கிருஷ்ணகிரி
கூடுதல் விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், கிருஷ்ணகிரி பகுதி விவசாயிகள் நூக்கல் சாகுபடி மேற்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி, கெலமங்கலம், ராயக்கோட்டை பகுதியில் நிலவும் சிதோஷ்ணநிலை காரணமாக விவசாயிகள் காய்கறிகள் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, கேரட், பீட்ரூட், பீன்ஸ், நூக்கல், காளிபிளவர், முட்டை கோஸ் உள்ளிட்ட ஆங்கில வகை காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர்.
கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம் பகுதி விவசாயிகள் தக்காளி, கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு வந்த நிலையில், தற்போது மாறி வரும் சிதோஷ்ண நிலையால் பீன்ஸ், கேரட், நூக்கல் உள்ளிட்ட ஆங்கில காய்கறிகள் சாகுபடிக்கு மாறியுள்ளனர். குறிப்பாக, கிருஷ்ணகிரி அணையின் பின் பகுதியில் உள்ள விவசாயிகள் பலர் தற்போது நூக்கல் சாகுபடியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக தின்னகழனி கிராமத்தை சேர்ந்த விவசாயி சங்கர் கூறும்போது, ‘நூக்கல் சாகுபடியில் அதிக லாபம் கிடைக்கும் என விவசாயிகள் பலர் தெரிவித்தனர். இதையடுத்து ரூ.8 ஆயிரம் செலவில் அரை ஏக்கர் பரப்பளவில் நூக்கல் பயிரிட்டேன். இதுவரை 1.5 டன் நூக்கல் அறுவடை செய்துள்ளேன். நல்ல விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், போதிய வருவாய் கிடைத்துள்ளது,’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.