சேலத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் சத்திரம் பகுதியில் உள்ள கடைகளில் மழை நீர் புகுந்தது. 
தமிழகம்

தொடர் மழையால் நீர் ஆதாரங்களில் நீர்மட்டம் உயர்வு: ஏற்காட்டில் 43.80 மிமீ மழை பதிவு

செய்திப்பிரிவு

சேலம்

சேலம், ஏற்காடு, மேட்டூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, தினசரி மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்கிறது. மக்களில் இயல்புநிலை பாதிக்காத வகையில் இரவு நேரத்தில் மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சேலத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் வரை பெய்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. புதிய பேருந்து நிலைய நுழைவு வாயில், மெய்யனூர் சாலை, 4 ரோடு, சத்திரம் சாலை, அணைமேடு, பொன்னம்மாபேட்டை மிலிட்டரி ரோடு மற்றும் நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

தொடர் மழை காரணமாக, சாலைகளில் ஏற்கெனவே பல இடங்களில் ஏற்பட்டிருந்த பள்ளம், மேலும் பெரிதானது. இப்பள்ளங்கள் மழைநீர் தேங்கியது தெரியாமல், வாகனங்களை இயக்கியவர்கள் தடுமாறி அவதிப்பட்டனர். சில இடங்களில் இருசக்கர வாகனங்கள் பாதியளவு மூழ்கும் அளவுக்கு மழைநீர் தேங்கியிருந்தது. சத்திரம் பகுதி சாலைகளில் மழைநீர் தாழ்வான கடைகளுக்குள் புகுந்தது.

ஏற்காட்டிலும் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது. வீரகனூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி வட்டாரங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்வதால், அங்குள்ள சுவேத நதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெத்தநாயக்கன்பாளையம் தொடங்கி தலைவாசல் வரையிலான வசிஷ்ட நதியில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது.

இதேபோல், ஏரிகள், குளங்களிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக, மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

நேற்று முன்தினம் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: சேலம் 43.70, ஏற்காடு 43.80, ஓமலூர் 42.40, மேட்டூர் 40 எடப்பாடி 36.40, வீரகனூர் 30 பெத்தநாயக்கன்பாளையம் 26 கெங்கவல்லி 20.40, தம்மம்பட்டி 19.40, ஆனைமடுவு 18, ஆத்தூர் 17.60, சங்ககிரி 15.20, காடையாம்பட்டி 9, கரியகோவில் 8, வாழப்பாடி 7 மிமீ மழை பதிவானது.

SCROLL FOR NEXT