சிறுநீரக தொற்று நோய்க்கு சிகிச்சை முடிந்த நிலையில் வேலூர் சிறையில் பேரறிவாளன் நேற்று அடைக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 1999-ம் ஆண்டு முதல் வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், கடந்த ஓராண்டாக சிறுநீர்ப்பை தொற்று நோயால் பாதிக்கப்பட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் வேலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். இதற்காக, கடந்த மாதம் 6-ம் தேதி வேலூர் சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு பேரறிவாளன் மாற்றப்பட்டார்.
அவருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் ஜூலை 1 முதல் 7-ம் தேதி வரை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு பேரறிவாளன் நேற்று மாற்றப்பட்டார். இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட அவர், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கெனவே தங்கியிருந்த பழைய அறையே அவருக்கு வழங்கப்பட்டது என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.