எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 
தமிழகம்

எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 97-வது பிறந்தநாள்: நேரில் சென்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வாழ்த்து

செய்திப்பிரிவு

புதுச்சேரி

எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவரது வீட்டுக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் புதுச்சேரி லாஸ்பேட்டையில் வசித்து வருகிறார். கி.ராஜநாராயணன், மாயமான், கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் உள்ளிட்ட நாவல்கள், எண்ணற்ற சிறுகதைகள், நாட்டுப்புறக் கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இதில், கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்.

அவரின் 97-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட பலரும் பங்கேற்றனர். பலரும் அவரிடம் ஆசிர்வாதம் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய கி.ராஜநாராயணன், இந்தி மொழியை திணிக்க முடியாது எனவும், இவ்விவகாரத்தில் அமைதியாக இருப்பதே, மொழியை திணிக்க நினைப்பவர்களுக்கு பெரிய அடியாக இருக்கும் எனவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், காரைக்காலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்க முதல்வர் நாராயணசாமி நேற்று சென்றிருந்ததால், இன்று (செப்.17) எழுத்தாளர் கி.ராஜநாரயணன் வீட்டுக்கு சென்றார்.

எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, பூங்கொத்து கொடுத்தார். கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த முதல்வர் சிறிது நேரம் அவருடன் உரையாடினார். இந்நிகழ்வின்போது எம்.பி.வைத்திலிங்கம், துணை சபாநாயகர் பாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செ.ஞானபிரகாஷ்

SCROLL FOR NEXT