தமிழகம்

பாமரனுக்கும் புரியும் புறநானூறு! - சாலமன்  பாப்பையாவின் வித்தியாசமான நூல் அறிமுக விழா

செய்திப்பிரிவு

ஒவ்வொரு நாளும் விழாக்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், சில விழாக்கள் மட்டும்தான் சட்டென்று நம் மனதில் ஒட்டிக்கொள்கின்றன. அந்த வகையில், கோவையில் வித்தியாசமாய் நடைபெற்றது பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் நூல் அறிமுக விழா!

அவரது 'புறநானூறு: புதிய வரிசை வகை' என்ற நூல் அறிமுக விழா, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

சங்கத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களில் ஒன்று புறநானூறு. நானூறு பாடல்களைக் கொண்ட, புறத் திணை சார்ந்த இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை. சங்க காலத்தில் ஆண்ட அரசர்கள் குறித்தும், மக்களின் சமூக வாழ்க்கை முறை குறித்தும் இந்நூல் எடுத்துரைக்கிறது.

கோவையில் நடைபெற்ற விழாவின் தொடக்கத்தில், பேராசிரியர் சாலமன் பாப்பையா எழுதிய நூலை மலர்ப் பல்லக்கில் வைத்து, அரங்கில் ஊர்வலமாய் கொண்டுவந்தனர். மலர்கள் தூவி சாலமன் பாப்பையாவை வரவேற்றனர். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன், சாலமன் பாப்பையாவுக்கு `ஞானச் செம்மல்' விருது, பாராட்டுப் பட்டயம், ரூ.25,000 பரிசு வழங்கினார். தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம் நூலை வெளியிட்டார்.

"புறநானூறு கூறும் சிறந்த கருத்துகளை பாமரனுக்கும் கொண்டு சேர்க்கும் அரிய பணியைத் திறம்பட தனது நூலில் செய்திருக்கிறார் சாலமன் பாப்பையா. இளம் தலைமுறையினர் உட்பட அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல் இது" என்று விழாவில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.

கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா, பேச்சாளர்கள் எஸ்.ராஜா, பாரதி பாஸ்கர், எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கவிஞர் சிற்பி பேசும்போது, "அனைவருக்கும் புரியும்வகையில், குறிப்பாக இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ளும் வகையில், புறநானூற்றை அற்புதமான எளிய நடையில் விளக்கியுள்ளார். அந்தக் காலகட்டத்திலும் கொடிய வறுமை இருந்துள்ளது. புலவர்கள் கந்தலாடை உடுத்திக்கொண்டு, வள்ளல்களிடம் பாடல்கள் பாடி, பரிசு பெற வரிசையில் காத்திருந்துள்ளனர். இதுபோன்ற பல குறிப்புகள் புறநானூறில் உள்ளன" என்றார்.

தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி.சுப்ரமணியம் பேசும்போது, "இந்நூல் வழியாக அகத்துக்கு மட்டுமல்ல, புறத்துக்கும் நெறிமுறைகளை விளக்கியுள்ளார் சாலமன் பாப்பையா" என்றார்.

எழுத்தாளர் பாரதி பாஸ்கர் பேசும்போது, "83 வயதிலும் அயராது உழைக்கிறார் சாலமன் பாப்பையா. இந்நூலுக்கான உரையை சுமார் 10 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் ஆராய்ச்சி செய்து, கையால் எழுதினார். அகநானாறுக்கும் உரை எழுதும் பணியைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது" என்றார்.

ஏற்புரையாற்றிய சாலமன் பாப்பையா, "என்னைத் தமிழறிஞர் என்று பாராட்டி, முதல் விருதை கோவை நன்னெறிக் கழகம்தான் வழங்கியது. கோவை மக்கள் தொடர்ந்து என் மீதான அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். எனக்கான பெருமை அனைத்தும் உ.வே.சா.வையே சேரும். பணத்தை இழந்து, கடும் உழைப்பைக் கொடுத்து தமிழை மீட்டவர் உ.வே.சா.

ஆரம்பத்தில் இலக்கியம் என்பது மேல்தட்டு மக்களுக்கானதாகவே இருந்தது. எனவே, நமது பழந்தமிழ் இலக்கியங்கள் கடைக்கோடி தமிழரையும் அடைய வேண்டுமெனத் திட்டமிட்டு, இந்நூலை எழுதினேன். கிராமங்கள், வேளிர்கள், மன்னர்கள், வீரர்கள், புலவர்கள் குறித்த பாடல்களை வரிசைப்படுத்தி, எளிமையான முறையில் உரை எழுதியுள்ளேன்" என்றார்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது, இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு அதிகம் பேர் வரமாட்டார்கள் என்ற புளித்துப்போன வாதத்தை முறியடிக்கும் வகையில் இருந்தது என்றால் அதில் மிகையில்லை.

SCROLL FOR NEXT