தமிழகம்

அதிமுக - அமமுக இணைப்பு வெறும் யூகம்: டிடிவி தினகரன்

செய்திப்பிரிவு

கும்பகோணம்

அதிமுக - அமமுக இணைப்பு என்பது யூகம். யூகங்களுக்கு எல்லாம் என்னால் பதில்கூற முடியாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

கும்பகோணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், "அமமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை. கட்சி எப்போதும்போல் பலமாக உள்ளது.

யாரோ ஒருசிலர் வெளியேறுவதால் அமமுகவில் சரிவு ஏற்பட்டுவிடாது. அவர்களால் முன்னேறவிடாமல் தடுக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டுதான் இருக்கின்றனர். அதனால் அமமுக தொடர்ந்து உறுதியாக இருக்கிறது" என்றார்.

இந்தி மொழி குறித்த அமித் ஷாவின் கருத்து தொடர்பான கேள்விக்கு, "இந்தியை வெறுக்‍கவில்லை, இந்தி திணிப்பைதான் எதிர்க்‍கிறோம் என்பதை மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சிறையிலிருந்து சசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி நடைபெற்று வருகிறது. அதிமுக - அமமுக இணைப்பு என்பது யூகம். யூகங்களுக்கு எல்லாம் என்னால் பதில்கூற முடியாது எனக் கூறிச் சென்றார்.

அமமுகவிலிருந்து விலகிய தங்கதமிழ்ச் செல்வன் தற்போது திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். அவரைத் தொடர்ந்து அமமுகவின் முக்கிய பிரமுகராகத் திகழ்ந்த புகழேந்தி போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இந்த நிலையில் அமமுகவின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குறிப்பாக அதிமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே அமமுகவை அதிமுகவுடன் இணைக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

இந்நிலையில்தான் டிடிவி தினகரன், அமமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை; இணைப்பு என்பது யூகம் என டிடிவி தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT