வைகோ: கோப்புப்படம் 
தமிழகம்

எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளேன்: வைகோ

செய்திப்பிரிவு

சென்னை

பேனர் கலாச்சாரம் அண்மைக் காலத்தில் வந்தது என, மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், சென்னையில், சுபஸ்ரீ என்ற 23 வயது பெண் மீது பேனர் விழுந்ததில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, திமுக உள்ளிட்ட கட்சிகள் பேனர்களை வைக்க வேண்டாம் என தங்கள் கட்சித் தொண்டர்களை கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக, சென்னையில், இன்று (செப்.17) செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "பேனர் கலாச்சாரம் அண்மைக் காலத்தில் வந்தது. அதிலும், என்னுடைய படங்களை வைத்து பேனர் வைக்கக் கூடாது என ஓராண்டுக்கு முன்பே வலியுறுத்தியிருக்கிறேன். எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என வலியுறுத்தியிருக்கிறேன். பேனர் கலாச்சாரத்தை எதிர்த்து குரல் கொடுத்தது மதிமுக.

இப்போதும், அண்மையில் நடைபெற்ற மாநாட்டில், மாநாட்டுக்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டிருந்த கொடிகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். யார் இதனை சகிப்பார்கள்? அப்போது, தொண்டர்கள் ஆத்திரத்தில், கொடிகளை கழற்ற வேண்டாம் என வலியுறுத்தினர். கொடி அவர்களுக்கு உயிர்.

மாநாட்டு வளாகத்துக்கு செல்லும் வழியிலே உள்ள கொடிகளை அகற்றுவதில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், தொண்டர் ஒருவரின் இடது தோள்பட்டை உடைந்து அவர் மருத்துவமனையில் இருக்கிறார். இந்த மோதலை விலக்கிவிட சென்றவர்களில் ஒருவர், நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இன்னும் 7 பேரையும் கைது செய்திருக்கின்றனர்," என வைகோ தெரிவித்தார்.

SCROLL FOR NEXT