வங்கிகள் வழங்கும் கடனுக்கும், மொத்த உற்பத்திக்கும் இடை யிலான விகிதத்தை 90 சதவீதம் வரை உயர்த்தலாம். மொத்த உற்பத்திக்கேற்ப வங்கிகள் அதிக அளவு கடன் வழங்க வேண்டும் என ஐஐஎம் பேராசிரியர் டி.டி.ராம் மோகன் கூறினார்.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநில மாநாடு சென்னையில் நேற்று நடந்தது. பேங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் சங்க செயலாளர் டாக்டர் சிதம்பர குமார் வரவேற்புரை ஆற்றினார். கூட்டமைப்பின் தமிழக பிரிவு தலைவர் தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ் தலைமை உரை ஆற்றினார். ‘இந்து’ என்.ராம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அகமதாபாத் ஐஐஎம் பேராசி ரியர் டாக்டர் டி.டி.ராம் மோகன் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது: வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி காரணமாக நாட்டில் உள்ள தலைசிறந்த 5 வங்கிகளின் லாபம், வைப்புத் தொகை உள்ளிட்டவை குறைந்துள்ளன. அத்துடன், வங்கி களின் வாராக்கடன் அதிகரித் துள்ளது. வங்கிகளின் வைப்புத் தொகை 1990-91ல் 40.3 சதவீதமாக இருந்தது. அது 2010-11ல் 73 சதவீதமாக அதிகரித்தது. இதே காலகட்டத்தில் வங்கிகளின் கடன் தொகை 24.3 சதவீதத்தில் இருந்து 54.5 சதவீதமாக அதிகரித்தது.
அரசிடம் இருந்து வங்கிகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி ஆண்டு மூலதனம் தேவைப்படுகிறது. கடந்த 2014-15ல் ரூ.7,900 கோடி வழங்குவதாக அரசு உறுதியளித்தது. மேலும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு ரூ.57,000 கோடி வழங்குவதாக கூறியுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் பல பிரச்சினைகள் இருந்தாலும், அங்கு வேலையில் சேர இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அங்குள்ள பணிப் பாதுகாப்பு மற்றும் வீட்டுக் கடன், மருத்துவம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளே இதற்கு காரணம்.
பொதுத்துறை வங்கிகள் சிறப்பான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளன. தரமான தொழில்நுட்பங்களையும், ஏராளமான கிளைகளையும் கொண் டுள்ளன. எவ்வித போட்டி சூழ் நிலையும் இல்லை. வங்கிகள் அளிக்கும் கடனுக்கும், மொத்த உற்பத்திக்கும் இடையிலான விகிதாச்சாரம் 60 சதவீதம் மட்டுமே உள்ளது. இதை 90 சதவீதம் வரை உயர்த்தலாம். மொத்த உற்பத்திக்கேற்ப வங்கிகள் அதிக அளவு கடன்களை வழங்கவேண் டும். இவ்வாறு டாக்டர் டி.டி.ராம் மோகன் கூறினார்.
‘இந்து’ என்.ராம் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ‘இந்து’ என்.ராம் பேசியதாவது:
வங்கித் துறையில் குறிப்பாக பொதுத்துறை வங்கிகள் தற்போது பல்வேறு பிரச்சினைகளை சந்திப் பது உண்மைதான். அதேநேரம், வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதன் மூலம், எண்ணிக்கை அடிப்படையிலும், தரத்தின் அடிப்படையிலும் வங்கி கள் சிறப்பான வளர்ச்சி அடைந்தன. இது வங்கித் துறையின், குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் சாதனை என்பது பெருமைக்குரியது.
வங்கிகளை தேசியமயமாக் கியது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய வளர்ச்சி யாகும். வங்கித் துறையில் உறுதி யான அடிப்படை கட்டமைப்பு, பூகோள ரீதியான பரவலாக்கல், மண்டல மற்றும் துறை ரீதியான வளர்ச்சி ஆகியவை தேவை என்பதை அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் தமிழ்நாடு கிளை வெளியிட்டுள்ள வங்கித் துறை சீர்திருத்த அறிக்கை உணர்த்து கிறது.
இவ்வாறு ‘இந்து’ என்.ராம் கூறினார்.
கூட்டமைப்பின் மாநில பிரிவுக் கான புதிய இணையதளத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளர் க.ஆனந்தகுமார் தொடங்கிவைத்தார். மாநாட்டுக் கான ஏற்பாடுகளை கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.விஜயசேனன், மகளிர் அணி தலைவர் சுமதி ஐயர் செய்திருந்தனர்.