சென்னை
மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுழல் காற்று வீசுவதால், மீனவர்கள் இரு நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (செப்.16) செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"கடந்த 24 மணிநேரத்தில், தஞ்சாவூர் மாவட்டம் கிராண்ட் அணைக்கட்டில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும. மாலையோ அல்லது இரவிலோ இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல், மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுழல் காற்று வீசுவதால், மீனவர்கள் மேற்கூறிய இடங்களுக்கு வரும் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தெற்கு ஆந்திரா மற்றும் வடக்குத் தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.
அதனால், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. தென் தமிழகத்தில் வெப்பச்சலனம் நிலவி வருவதால், அங்கேயும் கனமழை பெய்ய வாய்ப்புண்டு. மற்ற மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. கனமழைக்கு மழைக்கு வாய்ப்பில்லை,"
இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.