மகளிருக்கான மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதல் மாநிலமாகத் திகழ்வதாக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் பா.வளர்மதி கூறியுள்ளார்.
சென்னை ரட்லண்ட் கேட்டில் உள்ள ஆஷாநிவாஸில் வெள்ளிக் கிழமை நடந்த பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கை அமைச்சர் வளர்மதி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
வன்கொடுமை, குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம், கல்வி போன்றவற்றில் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகம். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கினார். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகக் குறைவாகவே உள்ளது. பாலியல், பலாத்காரம் இல்லாத மாநிலமாகத் தமிழகம் திகழ, 13 சிறப்பு உத்தரவுகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டங்கள், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம் போன்ற பெண்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்கான மேட்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதல் மாநிலமாகத் திகழ்கிறது.
இவ்வாறு அமைச்சர் வளர்மதி பேசினார்.
கருத்தரங்கில் சமூக பாதுகாப்பு இயக்குநர் ந.மதிவாணன், சென்னை மாநகராட்சி மண்டல மருத்துவ அலுவலர் டாக்டர் மஞ்சுளா, குற்றவியல் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா சீனிவாசன், குழந்தைகள் பாதுகாப்பு நிபுணர் வித்யாசாகர், யுனிசெப் பிரதிநிதிகள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.