கோவை
கோவையில் தங்கி பணியாற்றி பாகிஸ்தான் நாட்டு வாட்ஸ்-அப் குழுக்களுடன் தொடர்பு வைத்து தகவல் பரிமாற்றம் செய்த 3 இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை யில் நடந்த குண்டு வெடிப்பு சம் பவத்தில் தொடர்புடைய நபர், குண்டு வெடிப்புக்கு முன்பு கோவைக்கு வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகின. அந்நபர் குறித்து போலீஸார் விசாரித்தனர். பின்னர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மற்றும் சிமி அமைப்புடன் தொடர் புடைய 2 பேர் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரி களால் கைது செய்யப்பட்டனர். பின்னர், கோவையில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேரை, யுஏபிஏ (சட்ட விரோத செயல் தடுப்புச் சட்டம்) சட்டத்தின்கீழ் மாநகர காவல்துறையினர் கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து, ‘இலங்கை யில் இருந்து லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் கோவையில் ஊடுருவியுள்ளனர். அவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்’ என மத்திய உளவுத் துறையால் எச்சரிக்கப்பட்டது. இதையடுத்து, கோவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஏறத் தாழ ஒரு வார காலத்துக்கு பின்னர், கோவையில் இயல்பு நிலை திரும்பியது.
இந்நிலையில், கோவை இடையர் வீதியில் உள்ள செல்போன் கடையில், சில தினங்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவர் தனது செல்போனை பழுது நீக்க கொடுத்தார். பழுது நீக்கப்பட்ட செல்போனை அவர் உடனடியாக வாங்கவில்லை.
கடை உரிமையாளர், அந்த செல்போனை ஆன் செய்து, வாட்ஸ்-அப்பில் நுழைந்து பார்த்துள்ளார். அப்போது பாகிஸ்தான் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த ‘பாகிஸ்தான் முஜா கிதின், ரிமெம்பர் 27 பிப்ரவரி 2019’ ஆகிய வாட்ஸ்-அப் குழுவில் அந்த இளைஞர் உறுப்பினராக இருந்ததும், துப்பாக்கி உள்ளிட் டவை குறித்து பல்வேறு விவரங் கள் அதில் பரிமாற்றம் செய்யப் பட்டிருப்பதும் தெரியவந்தன. இதனால், அச்சமடைந்த செல்போன் கடை உரிமையாளர், இதுகுறித்து தனக்கு தெரிந்த உளவுத்துறை காவலரிடம் தெரிவித்துள்ளார்.
அத்தகவலை கொண்டு, மாநகர சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் அந்த செல்போனுக்கு சொந்தமான இளைஞரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த இளைஞர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பாரூக் கவுசீர் (25) என்றும், தற்போது கோவை இடையர் வீதியில் தங்கி, அங்குள்ள தங்க நகைப்பட்டறையில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
‘அந்த வாட்ஸ்-அப் குழுவில் எப்படி அந்த இளைஞர் சேர்ந்தார். அந்த குழுவில் உள்ள பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் யாராவது கோவைக்கு வந்து சென்றனரா, துப்பாக்கி தொடர்பாக என்னென்ன தகவல்கள் பரிமாறப்பட்டன. தாக்குதல் திட்டம் தொடர்பாக தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டதா’ உள்ளிட்டவை குறித்து அந்த இளைஞரிடம் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் விசாரித்தனர்.
அவர் அளித்த தகவலின் பேரில் மேலும் 2 இளைஞர்களையும் பிடித்து விசாரித்தனர். 3 பேரிடமும் மாநகர சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார், மாநகர போலீஸார், உளவுப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். 3 நாட்கள் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர், ‘எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்’ என்ற நிபந்தனையின் பேரில் சில தினங்களுக்கு முன்னர் அந்த 3 இளைஞர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர்.