திண்டுக்கல்
திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் பாம்பு கடித்து மாணவி உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பெரியூர் மலை கிராமத்தைச் சேர்ந்த வர் ராமர். கூலித் தொழிலாளி. இவரது மகள் வர்ஷா(14). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
விடுதியில் நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது வர்ஷா காலில் ஏதோ கடித்ததை உணர்ந்துள்ளார். இது குறித்து விடுதிக் காப்பாளரிடம் தெரிவித்தார். அதற்கு அவர், எலி கடித்திருக்கலாம் எனக் கூறி முதலுதவி சிகிச்சை அளித்து வர் ஷாவை தூங்க வைத்தார். ஆனால் அரை மணி நேரத்தில் மாணவியின் வாயில் நுரை தள்ளியது. இதை அடுத்து உடனடியாக அவரை திண்டுக்கல் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே வர்ஷா உயிரிழந்தார். பின்னர் விடுதி அறையை சோதனை செய்த போது அங்கு பாம்பு இருந்தது தெரியவந்தது. அதை சிலர் அடித்துக் கொன்றனர். மாணவி இறந்தது குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.