தமிழகம்

தமிழக சிபிஐ அதிகாரி அஸ்ரா கார்க்குக்கு டெல்லியில் ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற உள்துறை அமைச்சக அதிகாரி உட்பட 3 பேர் கைது: சென்னையை சேர்ந்த கட்டுமான நிறுவன நிர்வாகி மீது வழக்கு

செய்திப்பிரிவு

சென்னை

சிபிஐ அதிகாரி அஸ்ரா கார்க்குக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரின்பேரில். சென்னை கட்டுமான நிறுவன நிர்வாகி, உள்துறை அமைச்சக அதிகாரி, இடைத்தரகர் என 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

2004-ம் ஆண்டு பேட்ச் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க். இவர் நேர்மையான அதிகாரி என பெயரெடுத்தவர். 2004-ம் ஆண்டு திருப்பத்தூர் எஸ்பியாக காவல் பணியை தொடங்கியவர். பின்னர் நெல்லை, மதுரை, வேலூர், தர்மபுரி மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றினார். 2016-ம் ஆண்டு அயல் பணியில் டெல்லி சிபிஐ அதிகாரியாகச் சென்றார். அங்கு பணியிலிருக்கும்போதே டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.

இந்நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள சோமா எண்டர்பிரைசஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் மீதான வழக்கில், நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்றுக்கூறி, டெல்லி மத்திய உள்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக பணிபுரியும் தீரஜ் குமார் சிங் என்பவர், சிபிஐ டிஐஜி அஸ்ரா கார்கை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். கட்டுமான நிறுவனத்தின் மீதான நிலுவையில் இருக்கும் வழக்கை சாதாகமாக முடித்துக் கொடுத்தால் ரூ.2 கோடி லஞ்சம் தருவதாகவும் பேசியுள்ளார்.

மேலும், இதே விவகாரம் தொடர்பாக தினேஷ் சந்த் குப்தா என்பவரும் அஸ்ரா கார்கிடம் பேசியுள்ளார். அஸ்ரா கார்க் இதைக்கேட்டு அவர்களை கையும்களவுமாக பிடிக்க முடிவெடுத்தார். இதுகுறித்து தனது மேலதிகாரிகளிடம் அஸ்ரா கார்க் புகார் அளித்தார். உள்துறை அமைச்சக அதிகாரியான தீரஜ் குமார் சிங் பேசிய செல்போன் உரையாடல்களை செல்போனில் பதிவு செய்தும் வைத்திருந்தார் அஸ்ரா கார்க். அதை வைத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

கடந்த 2 நாட்களுக்கு முன் டிஐஜி அஸ்ரா கார்க்கை அவர்கள் தொடர்பு கொண்டபோது, டெல்லி லோதி சாலையில் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அவர்களை வரச்சொன்னார். முன்னரே திட்டமிட்டப்படி இரவு 11 மணி அளவில் அஸ்ரா கார்க்கின் காரில் அவரது ஓட்டுநர் மற்றும் வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரி அங்கு சென்றுள்ளனர். அங்கு வந்த உள்துறை அமைச்சக அதிகாரியான தீரஜ் குமார் சிங், இடைத்தரகர் தினேஷ் சந்த் குப்தா ஆகியோர் அஸ்ரா கார்க்கிடம் பேசியுள்ளனர்.

சோமா கட்டுமான நிறுவன உரிமையாளர்தான் பேசச் சொன்னாரா என உறுதிப்படுத்த அவரிடம் பேச வேண்டும் என அஸ்ரா கார்க் சொல்ல, அவர் போன் போட்டு கொடுத்துள்ளனர். பின்னர் கட்டுமான நிறுவன உரிமையாளர் ராமச்சந்திர ராவ், அஸ்ரா கார்க்கிடம் பேசியுள்ளார். இதையடுத்து முதற்கட்டமாக ரூ.10 லட்சம் தருவதாகவும் நல்லபடியாக முடித்தால் மீதி பணத்தை தருவதாகவும் பேசியுள்ளனர். அவர்களை கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகள் பிடித்தனர். அவர்களிடமிருந்து லஞ்சம் கொடுக்க வைத்திருந்த ரூ.10 லட்சத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சோமா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராமச்சந்திர ராவையும் சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT