தமிழகம்

சங்பரிவார் அமைப்புகளின் திட்டங்களை செயல்படுத்தும் அரசாகத்தான் பாஜக உள்ளது: திருமாவளவன் விமர்சனம்

எஸ்.ஸ்ரீனிவாசகன்

மதுரை

ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் செயல் திட்டங்களை செயல்படுத்துகிற அரசாகத்தான் பாஜக அரசு இருக்கிறது என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''கடந்த 5 ஆண்டுகால ஆட்சியின் போது பாஜக அரசு, ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையில் தீவிரம் காட்டியது. அப்போதே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இது ஒரு ஆபத்தான மூலம். இது இந்தியத் தன்மையையும் ஜனநாயகத்தையும் அழிக்கின்ற முயற்சி என்ற சுட்டிக்காட்டியது.

மீண்டும் அவர்கள் ஆட்சியில், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அடிப்படையில் தான்தோன்றித்தனமான முடிவுகளை எடுத்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் அரசு எடுத்திருக்கின்ற முடிவு அதை உறுதிப்படுத்துகிறது. தற்பொழுது வெளிப்படையாகவே உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒரே தேசம் ஒரே மொழி என்ற கொள்கை இருந்தால்தான் இந்தியா வல்லரசு நாடாக இருக்க முடியும் என்று கூறியிருக்கிறார். இதுதான் அவர்களின் நீண்ட கால கனவுத் திட்டம். அவர்களின் வழிகாட்டு இயக்கமாக இருக்கிற ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகளின் செயல் திட்டங்களை செயல்படுத்துகிற அரசாகத்தான் பாஜக அரசு இருக்கிறது.

ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்றால் ஒரே தேசம்; ஒரே மதம், ஒரே தேசம்; ஒரே மொழி என்று பொருள். இந்தி மொழியைத் தவிர வேறு மொழி எதுவும் இருக்கக்கூடாது இந்து மதத்தைத் தவிர வேறு மதம் இருக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் இறுதி இலக்கு. அதற்கேற்ப கல்விக் கொள்கையையும் அவர்கள் மாற்றி வருகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது'' என்று தெரிவித்தார்.

பேனர் சரிந்து விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ''ஆளுங்கட்சிக்கு ஒரு அணுகுமுறை பிற கட்சிக்கு ஒரு அணுகுமுறை என்ற அடிப்படையில்தான் பேனர் உள்ளிட்டவைகளில் காவல்துறை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியால் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் எதை வேண்டுமானாலும் செய்து செய்து கொள்ள முடியும். சாலையை மறித்து இருபுறமும் கொடிகள், தோரணங்கள் உள்ளிட்டவை அமைக்க முடியும். அதற்கு யாரிடத்திலும் அவர்கள் அனுமதி கேட்கத் தேவையில்லை, காவல்துறை அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது.

ஆகவே ஆளுங்கட்சிக்கு ஒரு அணுகுமுறை; விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட வளரும் கட்சிகளுக்கு ஒரு அணுகுமுறை என காவல்துறையின் சார்பு அணுகுமுறையால்தான் பல அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சுபஸ்ரீயின் மரணம்கூட இப்படித்தான் நடந்துள்ளது. பேனர் வைப்பதற்கு ஒரு சில நடைமுறைகளை உயர்நீதிமன்றம் தந்தாலும்கூட அதை நடைமுறைப் படுத்துவதில்லை

இதற்காக ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT