டிடிவி தினகரன்: கோப்புப்படம் 
தமிழகம்

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: மாணவர்களுக்கு மன உளைச்சலை அதிகரிக்கும்; தினகரன் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (செப்.14) வெளியிட்ட அறிக்கையில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்புக் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு திடீரென அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.

மத்திய அரசு மேற்கொண்ட சட்டத் திருத்தத்தின்படி, இப்பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக கூறியுள்ளார்கள். ஆறு மாதங்களுக்கு முன்பு இப்படியொரு தகவல் வெளியானபோது, "மாநில அரசு விரும்பினால் இப்பொதுத் தேர்வை நடத்தலாம் என்றுதான் மத்திய அரசு கூறியிருக்கிறது" என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். ஆனால், அதற்கு மாறாக தற்போது இந்த அறிவிப்பை திடீரென வெளியிட்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில், இத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்று குறிப்பிட்டிருக்கின்றனர். இது தமிழக அரசு உச்சகட்ட குழப்பத்தில் இருப்பதைக் காட்டுகிறது. அப்படி என்றால், பொதுத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டிய அவசியம் என்ன? மேலும், 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டால் இடைநிற்றல் அதிகமாகும் என்ற கல்வியாளர்களின் எச்சரிக்கை குறித்து தமிழக அரசுக்குக் கவலை இல்லையா? குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பதை ஆட்சியாளர்கள் ஏன் உணரவில்லை? மேலும், ஏற்கெனவே மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் மன உளைச்சலை அதிகரிக்கவே செய்யும்.

மத்திய அரசு இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கிச் சொல்லி, மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, மாநில அரசுக்கு இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது. எனவே, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்," என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT