இந்திய ஜவுளி ஏற்றுமதியை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும்அடிப்படை சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு, மத்திய நிதியமைச்சரிடம் ஜவுளித் துறையினர் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, செயற்கை பஞ்சுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பைக் குறைக்குமாறும், நூல் மற்றும் துணி ஏற்றுமதிக்கு உதவும் ஆர்ஓஎஸ்டிஎல் (Rebate of State and Central Taxes and Levies) திட்டத்தை செயல்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு ஜவுளித் துறை சங்கத்தினரை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற, இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் (ஐ.டி.எஃப்.) அமைப்பாளர் பிரபு தாமோதரனிடம் பேசினோம்.
“ஜவுளித் துறை சார்ந்த, முக்கியமான தொழில் துறை அமைப்பினரை சந்தித்து, பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவற்றைத் தீர்க்க நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் நிதியமைச்சர்.
ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்க வேண்டுமென்றால், பருத்தி மற்றும் செயற்கைப் பஞ்சு கலந்த ஆடைகளை அதிக அளவில் தயாரிக்க வேண்டும். நமது போட்டியாளரான வியட்நாமுடன் ஒப்பிடும்போது, பருத்தி மற்றும் செயற்கைப் பஞ்சு கலந்த ஆடைகளை, நம்மைவிட அவர்கள் பல மடங்கு அதிகம் ஏற்றுமதி செய்கின்றனர்.
அமெரிக்க-சீனா வர்த்தகப் போர் காரணமாக, இந்தியா, வங்கதேசம், வியட்நாம் நாடுகள் அமெரிக்காவுக்கு ஜவுளி ஏற்றுமதியை அதிகரித்துள்ளன. இந்தியா பருத்தி சார்ந்த ஆடைகளில் 10 சதவீத வளர்ச்சி கண்டிருந்தாலும், பருத்தி-செயற்கைப் பஞ்சு கலந்த ஆடை ஏற்றுமதியில் பின்தங்கியுள்ளோம். எனவே, அமெரிக்கர்கள் அதிகம் விரும்பும் இந்த வகை ஆடை ஏற்றுமதியில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.ஜவுளித் துறையின் அனைத்து மூலப் பொருட்களுக்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பை செயல்படுத்த வேண்டும். முதல்கட்டமாக செயற்கை பஞ்சுக்கான ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் குறைக்க வேண்டும். இது வளர்ச்சி மற்றும் ஏற்றுமதிக்கு பெரிதும் உதவும்.
உள்ளீட்டு வரிகளை திரும்பப் பெறுவதற்காக , நூல் மற்றும் துணி ஏற்றுமதிக்கு சலுகை வழங்கும் ஆர்ஓஎஸ்டிஎல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இது, ஏற்றுமதி சரிவில் சிக்கியுள்ள நூல் மற்றும் துணி தயாரிப்பாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும். ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில், 80 முதல் 85 சதவீதம் சிறு, நடுத்தர நிறுவனங்களே பங்கு வகிக்கின்றன. எனிலும், நடைமுறை மூலதனத்தை பல்வேறு காலகட்டங்களில் இழந்ததன் காரணமாக, இந்த நிறுவனங்களின் உற்பத்தி செலவு உயர்ந்து, சிரமத்துக்கு உள்ளாகின. இது தொடர்பாக ஒரு குழுவை அமைத்து, ஆய்வு செய்து, சிறப்புத் திட்டத்தை அறிவித்தால், அனைத்து நிறுவனங்களும் சீரான வளர்ச்சி கண்டு, ஏற்றுமதியை அதிகரிக்கும்.
வங்க தேசத்தில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் ஆயத்த அடைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. பெரிய பிராண்டுகள், ரீடெய்ல் ஷோரூம்கள் ஆகியவை அதிகம் இறக்குமதி செய்வதால், உள்ளூர் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றைக் கட்டுப்படுத்த ஒரு கமிட்டியை மத்திய அரசும் அமைத்துள்ளது.
மேலும், இறக்குமதியில் ஈடுபடும் பெரிய நிறுவனங்களையும், கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, சூரத் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்களையும் அழைத்து, மத்திய அரசு ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும்.
பெரு நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும். வங்க தேசத்தைக் காட்டிலும் சிறந்த ஆடைகளை, குறைந்த விலையில் உள்ளூர் தயாரிப்பாளர்களால் வழங்க முடியும். மத்திய அரசு ஏற்பாடு செய்யும் ஆலோசனைக் கூட்டத்துக்கு, உள்ளூர் உற்பத்தியாளர்களை அழைத்துவர நாங்கள் தயாராக உள்ளோம்.
இந்தக் கோரிக்கைகளை கவனமாக கேட்டுக்கொண்ட மத்திய நிதியமைச்சர், தொடர்ந்து அமைச்சக அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கும்படியும், தேவையான புள்ளி விவரங்களை வழங்குமாறும், அனைவரும் ஒன்றிணைந்து துறையின் போட்டித்திறனை அதிகரிக்க முயற்சி எடுக்குமாறும் அறிவுறுத்தினார் .
இத்துறையின் முக்கியத்துவத்தை மத்திய அரசு உணர்ந்துள்ளதாகவும், ஜவுளித் துறை வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் அவர் உறுதி அளித்தார். இது ஜவுளித் துறையினரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் சந்திப்பாக அமைந்தது” என்றார்.