தமிழகம்

கண்ணான கண்ணே தோல்வி கண்டு துவளாதே!

செய்திப்பிரிவு

தேர்வில் தோல்வி, ஆசிரியர்கள் அல்லது பெற்றோர் திட்டியது, சில நேரங்களில் காதல் விவகாரம் ஆகியவற்றால் பள்ளி மாணவனோ அல்லது மாணவியோ தற்கொலை என்ற செய்தியைப் படிக்கும் போதெல்லாம் மனம் பதைபதைக்கும். சிறு பிரச்சினையைக்கூட எதிர்கொள்ள முடியாத இவர்கள், எப்படி எதிர்காலத்தில் ஏற்படும் எண்ணற்ற சவால்களை எதிர்கொள்வார்கள்? பாடம் கற்றுத் தரும் ஆசிரியர்கள், மன தைரியத்தை கற்றுத் தருவதில்லையா? என்றெல்லாம் கேள்வி எழும்.

எனினும், கொஞ்சம் கொஞ்சமாக தற்போது மாணவர்களிடம் விழிப்புணர்வும், தோல்வியைக் கண்டு துவளாதிருக்க மாணவர்களைத் தயார்படுத்த வேண்டுமென்ற எண்ணம் ஆசிரியர்களிடமும் அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில், கோவையில் மாணவர்களிடம் மன உறுதியை அதிகப்படுத்தவும், மன நலனை மேம்படுத்தவும் உதவும் வகையிலான கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எம்பவர்மென்ட் ஆஃப் பர்சன்ஸ் வித் மல்டிபுள் டிஸபிலிட்டீஸ் அமைப்பு, தமிழ்நாடு மருத்துவ உளவியல் நிபுணர்கள் அமைப்பு மற்றும் காக்னிட்டோ லேர்னிங் அகாடமி ஆகியவை சார்பில் கோவை அரசு கலைக் கல்லூரி சாலையில் உள்ள திவ்யோதயா அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உளவியல் நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், சிறப்பு ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காக்னிடோ அகாடமியின் இயக்குநர் டாக்டர் என்.லட்சுமணன் வரவேற்றார். தமிழ்நாடு மருத்துவ உளவியல் நிபுணர்கள் சங்கச் செயலர் டாக்டர் என்.சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ரூட்ஸ் குழு மனிதவளப் பிரிவு இயக்குநர் கவிஞர் கவிதாசன் பேசும்போது, “தற்போதுள்ள சூழல் மாணவர்களுக்கு இறுக்கத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது. பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் எதிர்பார்ப்புகளை, மாணவர்களிடம் திணித்துக் கொண்டிருக்கிறோம். மேலும், அவர்களுக்கு இயல்பாக இருக்கக் கூடிய ஆர்வத்தை தொலைத்துவிடச் செய்கிறோம்.

அவர்களுக்கு எந்தத்துறையில் ஆர்வம் இருக்கிறதோ, அந்தத்துறையில் முன்னேறிச் செல்ல வழிகாட்டுவதே சாலச் சிறந்தது. வளரிளம் பருவத்தில் மாணவர்கள் செய்யும் சிறிய தவறுகளுக்காக அவர்களை உடல் ரீதியாக தண்டிக்காமல், மன ரீதியாக அணுக வேண்டும். அவர்களது மன வளத்தைப் பெருக்கி, எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் அளவுக்கு பக்குவப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு இடையிலான பிரச்சினைகள், மாணவர்கள்-ஆசிரியர்கள் இடையிலான பிரச்சினைகள், மாணவர்-பெற்றோருக்கு இடையிலான மன ரீதியிலான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும். இல்லையேல், அது மனதில் வடுவாகப் பதிந்து, எதிர்காலத்தில் அவர்களது ஆளுமையைப் பாதிக்கும்.

பல்வேறு விமர்சனங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் குழந்தைகளை உட்படுத்தாமல், இயல்பாக வளர அனுமதிக்க வேண்டும். தொழில்நுட்பம் வளர்ந்த இக்காலத்தில், குழந்தைகளிடம் பேசுவதற்கும், கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் தினமும் ஒரு மணி நேரமாவது ஒதுக்க வேண்டும். அப்போதுதான், பள்ளியில் நடக்கும் பிரச்சினைகளையும், மாணவர்களின் குறைகளையும் பெற்றோர் தெரிந்துகொள்ள முடியும்.எல்லா குழந்தைகளும், எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள் என்று கூற முடியாது. அவர்கள் எந்தத்துறையை விரும்புகிறார்களோ, அந்தத்துறையில் உயர வழிகாட்ட வேண்டும்” என்றார்.

மருத்துவ உளவியல் நிபுணர்கள் டாக்டர் டி.தனபால், டாக்டர் சௌமியா, டாக்டர் ராஜகுமாரி, கே.விஜயன், டாக்டர் அனுஜா, டாக்டர் உமாதேவி, பி.தமிழ்செல்வன், டாக்டர் என்.சுரேஷ்குமார் ஆகியோர், உளவியல் ரீதியாக மாணவர்களை அணுகுவது, அவர்களது மன உறுதியை வலுப்படுத்துவது, மன நலனைப் பாதுகாப்பது, சிறு பிரச்சினைகளைக் கூட எதிர்கொள்ள முடியாதது, தோல்விகளால் துவண்டுபோவது, தனிப்பட்ட முறையில் நேரம் ஒதுக்கி, அவர்களது குறைகளைக் கேட்பது, செல்போனிலிருந்து மீட்பது, பிரச்சினைகளை எதிர்கொள்ள கற்றுக் கொடுப்பது குறித்தெல்லாம் விளக்கி, அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிவித்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களை அணுகும் முறைகள், அவர்களது பழக்க வழக்கங்களைப் புரிந்துகொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துவது, எளிதில் உணர்ச்சிவசப்படுவதைக் கட்டுப்படுத்துவது, சரியான முறையில் உண்ணவும், உறங்கவும் கற்றுத் தருவது உள்ளிட்டவை குறித்தும் விளக்கப்பட்டது. மாநில அளவிலான இந்தப் பயிற்சி முகாம் இன்றும், நாளையும்கூட (செப். 14, 15) நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT