கடலூர்
கீழணையில் (அணைக்கரை) இருந்து கொள்ளிடத்தில் விநாடிக்கு 31 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி அணையில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்தத் தண்ணீர் கல்லணைக்கு வந்து, அங்கிருந்து கடந்த 9-ம் தேதி விநாடிக்கு சுமார் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டது.
கொள்ளிடத்தில் திறந்து விடப் பட்ட தண்ணீர் கடந்த 10-ம் தேதி அதிகாலை கீழணைக்கு (அணைக் கரைக்கு) வந்து சேர்ந்தது.
கீழணையில் 9 அடி தண்ணீரை மட்டுமே தேக்க முடியும் என்பதால் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. இது கடலில் சென்று கலக்கும்.
நிலத்தடி நீர்மட்டம் உயரும்
இருந்தபோதிலும் நாகை மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்டத் தின் கடைமடை பகுதிகளில் கரை யோர கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதன் காரணமாக குடிநீர் பற்றாக்குறை நீங்கும், மேலும் உப்பு நீர் கொள்ளிடம் ஆற்றில் உட்புகுவதை இது தடுக்கும்.
இந்த நிலையில் கல்லணையில் இருந்து கடந்த நாட்களாக கொள் ளிடத்தில் படிப்படியாக தண்ணீரை அதிகப்படுத்தி நேற்று விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கீழணையில் (அணைக்கரை) இருந்து கொள்ளிடத்தில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகப்படுத்தப்பட்டு நேற்று விநாடிக்கு 31 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வடவாற்றில் விநாடிக்கு 2 ஆயிரத்து 120 கன அடியும், வடக்குராஜன் வாய்க்காலில் விநாடிக்கு 586 கன அடியும், தெற்கு ராஜன் வாய்க்காலில் விநாடிக்கு 546 கன அடியும், குமிக்கி மண்ணியாற்றில் விநாடிக்கு 146 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
சென்னை நீரின் அளவு உயர்வு
இந்த நிலையில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 50 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து கல்லணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வீராணம் ஏரி வழியாக வாலாஜா, பெருமாள் ஏரி ஆகியவற்றை நிரப்பிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்து, வாலாஜா ஏரியில் இருந்து பரவனாறு வழியாக பெருமாள் ஏரியை நிரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சிதம்பரம் நீர்வள ஆதார அமைப்பு பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சாம்ராஜ் கூறுகையில், கல்லணை யில் இருந்து கீழணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து, கொள் ளிடத்தில் திறந்து விடப்படும் அளவு படிப்படியாக குறைக்கப்படும், விவசாய பாசனத்துக்காக தற்போது அனைத்து பாசன வாய்க்கால்களும் திறக்கப்பட்டுள்ளன என்றார்.