தமிழகம்

இட்டார்சி ரயில் நிலைய தீ விபத்தால் 3200-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து: 23-ம் தேதிக்குள் பணிகளை முடிக்க தீவிரம்

செய்திப்பிரிவு

இட்டார்சி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இதுவரை 3200-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்திய ரயில்வே துறைக்கு ரூ.1,230 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 23-ம் தேதிக்குள் இங்கு சீரமைப்பு பணிகளை முடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள இட்டார்சி ரயில் நிலையம் நான்கு திசைகளில் இருந்து வரும் விரைவு ரயில்களை சிக்னல்கள் மூலம் கண்காணித்து அனுப்பும் முக்கிய ரயில்நிலையமாக விளங்குகிறது. இந்த ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 17-ம் தேதி மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இங்கு சீரமைப்பு பணிகள் இன்னும் முடியாததால் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகள் சிலரிடம் கேட்ட போது, ‘‘இட்டார்சி ரயில்நிலைய தீ விபத்து மிகப்பெரிய விபத்தாகும். இந்த வழித்தடத்தில் தினமும் 200க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது தினமும் 70க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் 17-ம் தேதியில் இருந்து இதுவரையில் 3200-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ரயில்வே துறைக்கு சுமார் ரூ.1,230 கோடி வரையில் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தற்போது 950 பொறியாளர்களைக் கொண்டு 50 அதிகாரிகளின் தலைமையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 17-ம் தேதிக்குள் சீரமைப்பு பணிகளை முடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 23-ம் தேதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.

          
SCROLL FOR NEXT