திருநெல்வேலி
சுற்றுலா விசாவில் மலேசிய நாட்டுக்கு வேலைக்குச் சென்றுவிட்டு தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 8 பேரை மீட்டுத்தர அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மனு கொடுத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்த டிராவல் ஏஜென்ட் ஒருவர், மலேசியாவில் மாதம் 40 ஆயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு ஆட்கள் சேர்க்கப்படுவதாகக் கூறியுள்ளார். அதன்பேரில், ஒரு நபருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் பெற்றுக்கொண்டு, சுற்றுலா விசா மூலம் பலரை மலேசியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், விசா காலம் முடிவடைந்தும், சொந்த நாட்டுக்குத் திரும்பாதவர்களை கண்டுபிடித்து, மலேசிய போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.
அந்த ஏஜென்ட் மூலம் அனுப்பப்பட்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர், மலேசியாவில் சிக்கித் தவிப்பதாகவும், அவர்களில் சிலரை மலேசிய போலீஸார் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று திரண்டுவந்து புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "இட்டமொழியைச் சேர்ந்த சீதாராமன், சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த வசந்தகுமார், மயிலாடி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், கன்னியாகுமரியைச் சேர்ந்த தினேஷ்குமார், செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த சுபின், சுரேஷ்குமார், முத்துகிருஷ்ணன், ஆபிரகாம் ஆகியோர் மலேசியாவில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்க ஆட்சியர் உதவ வேண்டும்.
சுற்றுலா விசாவில் அனுப்பியது குறித்து சந்தேகம் அடைந்து ஏஜென்டிடம் கேட்டபோது, பணியில் சேர்ந்த பின்னர் விசாவை மாற்றிக்கொள்ளலாம் என்று கூறி ஏமாற்றிவிட்டார். இவர்களில் சிலரை மலேசிய போலீஸார் கைது செய்துவிட்டனர். சிறையில் இருப்பவர்களை விடுவித்து, இந்தியாவுக்கு அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பணம் வாங்கிக்கொண்டு, ஏமாற்றி மலேசியாவுக்கு ஆட்களை அனுப்பிய ஏஜென்ட் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
அழகப்பபுரத்தைச் சேர்ந்த சேர்மராஜ் என்பவர் கூறும்போது, "நானும் சுற்றுலா விசாவில் மலேசியாவுக்குச் சென்று, ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். தமிழகத்தைச் சேர்ந்த நிறைய பேர் இவ்வாறு சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு சென்று வேலையில் சேர்ந்துள்ளனர். அவர்களில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான் தங்கியிருந்த இடத்தில் அதிகாரிகள் சோதனை நடத்த வருவதாகத் தெரியவந்தது. இதனால், நான் சரணடைந்து, பொது மன்னிப்பு கேட்டு, அபராதம் செலுத்தி, தாயகத்துக்கு திரும்பி வந்தேன். சுபின், ஆபிரகாம், வசந்தகுமார் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களை மீட்க வேண்டும்" என்றார்.
-த.அசோக்குமார்