பேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ 
தமிழகம்

பேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ மரணத்துக்கு நீதி கேட்டு மேற்கு தாம்பரத்தில் இன்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

செய்திப்பிரிவு

பிளக்ஸ் பேனர் விழுந்ததில் விபத்தில் சிக்கி பலியான இளம்பெண்ணுக்கு பல்லாவரம் மற்றும் துரைப்பாக்கம் மக்கள் சார்பில் இன்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடத்த அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு வரும் அதிமுக பிரமுகர்களை வரவேற்க துரைப்பாக்கம், வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலைத் தடுப்புகளிலும் வரிசையாக பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.

இதில் ஒரு பேனர் சாலையில் சென்ற குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ ரவி மீது விழுந்தது. பேனர் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியதில் காயமடைந்த சுபஸ்ரீ மரணமடைந்தார்.

கோவையில் கடந்த 2017 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி இளைஞர் ரகு என்பவர் உயிரிழந்தார். இவரது மரணம் பெரும் கேள்வியைக் எழுப்பிய நிலையில் அதேபோன்று இளம்பெண் சுபஸ்ரீ மரணமடைந்தார்.

மு.க.ஸ்டாலின், முத்தரசன், தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சுபஸ்ரீ மரணத்துக்கு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். சமூக வலைதளங்களிலும் சுபஸ்ரீயின் மரணத்துக்கு நீதி கேட்டு பலரும் #Justiceforsubhasree #Whokilledsubhasree என்ற ஹேஷ்டேக்கில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுபஸ்ரீயின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்லாவரம் மற்றும் துரைப்பாக்கம் மக்கள் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று மாலை 4 மணியளவில் மேற்கு தாம்பரம், வெற்றி நகர் முதல் தெருவில் உள்ள பிரிட்டி லில் ஆர்ட்ஸ் சமூகநலக் கூடத்தில் நடைபெற உள்ளது. சுபஸ்ரீயின் நண்பர்களும் இதற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT