சென்னை,
சாலைகளை ரத்தத்தால் வர்ணம் பூச எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு வரும் அதிமுக பிரமுகர்களை வரவேற்க நேற்று துரைப்பாக்கம் வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலைத் தடுப்புகளிலும் வரிசையாக பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.
இதில் ஒரு பேனர், சாலையில் சென்ற குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்தது. பேனர் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், வழக்கறிஞர் லட்சுமி நாராயணன், இன்று (செப்.13) காலை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேசஷாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் இச்சம்பவம் குறித்து முறையீடு செய்தார்.
அப்போது, "சட்டவிரோதமான பேனர்களைத் தடுக்க உயர் நீதிமன்றம் ஏற்கெனவே கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. அதனை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. நேற்று மாலை சுபஸ்ரீ என்ற பெண்மீது, சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், லாரி மோதி உயிரிழந்தார். இதனால், அப்பெண்ணின் பெற்றோர் கடுமையான துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என முறையிட்டார்.
அப்போது நீதிபதிகள், "அரசு அதிகாரிகள், மனித ரத்தத்தை உறிஞ்சும் நபர்களாக மாறிவிட்டனர். இன்னும் எவ்வளவு ரத்தம் தான் உங்களுக்குத் தேவைப்படும்? சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களை அகற்றவும், அதனைத் தடுக்கவும் கடுமையான உத்தரவுகளை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. எந்தவொரு உத்தரவுகளையும் அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை.
அரசியல்வாதிகளுக்கும் இந்த உயர் நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்தது. அரசியல் கட்சியினரும் அதனை மதிப்பதாகத் தெரியவில்லை. திருமண விழாக்களுக்கு பேனர்கள் வைத்துதான் வரவேற்க வேண்டுமா? இல்லையென்றால் அவர்களுக்கு வழி தெரியாதா? பல கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தோம். தலைமைச் செயலகத்தை மட்டும்தான் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவில்லை. நாங்களே எல்லா உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? அரசு உத்தரவுகளை நாங்கள் ஏற்று நடத்த முடியாது.
சட்டவிரோத பேனர்கள் மூலமாக சாலைகளை ரத்தத்தால் வர்ணம் பூச எத்தனை லிட்டர் ரத்தம் உங்களுக்குத் தேவைப்படும்?", என எச்சரித்த நீதிபதிகள், அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணனை நோக்கிக் கேள்வி எழுப்பினர்.
இந்த முறையீட்டை, வழக்காகத் தாக்கல் செய்யும் போது, கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.