தமிழகம்

கோவையில் புதிய திறந்தவெளிச் சிறைச்சாலை: மாநிலம் முழுவதும் 8 சிறைகளில் அமைகிறது; விவசாயப் பணி மேற்கொள்ள முடிவு 

செய்திப்பிரிவு

டி.ஜி.ரகுபதி

கோவை 

கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில், புதியதாக திறந்த வெளிச்சிறைச்சாலை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து, முதன்மையான சிறையாக கோவை மத்திய சிறை உள்ளது. இங்கு 1,700 பேர் அடைக்கப்பட்டுள்ள னர். சிறைக் காவலர்களுடன், மத்திய ரிசர்வ் போலீஸ் படை கண்காணிப்பும் கோவை மத்திய சிறையில் உள்ளது. இதற்கருகே, தனியிடத்தில் பெண்கள் சிறை, சிங்காநல்லூரில் திறந்தவெளிச்சிறை ஆகியவையும் உள்ளன.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்படும் கைதிகளில், நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தண்டனைக் கைதிகள், சிங்காநல்லூர் திறந்தவெளிச்சிறையில் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அங்கு விவசாயப் பணியை அவர்கள் மேற்கொள்கின்றனர். இந்நிலையில், சிங்காநல்லூரில் உள்ள திறந்தவெளிச் சிறையை போல், கோவை மத்தியசிறை வளாகத்தில் சிறியளவிலான திறந்தவெளிச்சிறை (செமி ஓப்பன் பிரிசன்) அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலத்தை தயார் செய்யும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து கோவை மத்திய சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘சென்னை புழல் 1, கோவை, வேலூர், கடலூர், திருச்சி, சேலம், மதுரை, பாளையங்கோட்டை ஆகிய 8 மத்திய சிறைகளின் வளாகத்தில், சிறியளவிலான திறந்தவெளிச் சிறைச்சாலை அமைக்க அரசு உத்தரவிட்டு சில வாரங்களுக்கு முன்னர் அரசாணை (எண் : 2367) வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து மேற்கண்ட 8 சிறைச்சாலைகளின் வளாகங்களில், இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறியளவிலான திறந்தவெளி சிறைச்சாலை என்றால், அங்கு விவசாய நிலம் இருக்கும். தேர்வு செய்யப்படும் கைதிகள் விவசாயப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் சிறையின் பின்புறம் விவசாய நிலம் உள்ளது. இங்கு 5 ஏக்கர் பரப்பளவில் சிறியளவிலான திறந்தவெளிச்சிறை அமைக்கப்பட உள்ளது. இங்கு கத்திரி, பீட்ரூட், முள்ளங்கி, வெண்டைக்காய் போன்ற குறுகிய கால காய்கறிகள் சாகுபடி செய்வதற்காக நிலம் தயார்ப்படுத்தப்பட்டு வருகிறது. நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் கைதிகள் இங்கு பணியில் ஈடுபடுத்தப்படுவர். அரசாணைப்படி இங்கு 100 கைதிகளை பணியில் ஈடுபடுத்தலாம். ஆனால், தற்போது முதல் கட்டமாக 20 தண்டனைக் கைதிகள் தேர்வு செய்யப்பட்டு விவசாயப்பணியில் ஈடுபடுத்தப்படுவர்,’’ என்றார்.

தேர்வு செய்யப்படும் முறை

கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கூறும்போது,‘‘ அரசு உத்தரவை தொடர்ந்து, கோவை மத்தியசிறை வளாகத்தில், சிறியளவிலான திறந்தவெளிச் சிறைச்சாலை புதியதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்பணியில் ஈடுபடுத்தப்படும் கைதிகளை சிறைத்துறை டிஐஜி தலைமையிலான குழுவினர் தேர்வு செய்வர்.

அந்தக்குழுவில் சிறைக் கண்காணிப்பாளர், நல அலுவலர், ஜெயிலர் உள்ளிட்டோர் இருப்பர். திருட்டு, வழிப்பறி, பாலியல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட கைதிகள், தொடர் குற்றத்தில் ஈடுபடும் கைதிகள், தப்பியோடும் எண்ணம் உள்ள கைதிகள், நன்னடத்தை விதிகளை மீறிய கைதிகள் ஆகியோர் இந்தப்பணிக்கு தேர்வு செய்யப்படமாட்டார்கள். சிறை விதிகளுக்கு கட்டுப்பட்டு, நன்னடத்தையுடன் உள்ள, விவசாயப் பணிகள் தெரிந்த 21 முதல் 55 வயது வரையிலான தண்டனைக் கைதிகள் மட்டுமே இங்கு பணிபுரிய தேர்வு செய்யப்படுவர். சிறியளவிலான திறந்தவெளி சிறைச்சாலையில் பணியில் ஈடுபடுத்தப்படும் கைதிகளின் தண்டனைக் காலம் சரிபாதியாக குறையும். கோவை மத்திய சிறையில் சிறியளவிலான திறந்தவெளிச்சிறைச்சாலை ஓரிரு வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரும்,’’ என்றார்.

SCROLL FOR NEXT