தமிழகத்தில் மதுவிலக்கை திமுக அமல்படுத்தும் என்ற நம்பிக்கை தமக்கில்லை என பாமக இளைஞரணித் தலைவரும் தருமபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேட்டியளித்த அவர், "தமிழத்தில் வரும் 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது மதுவிலக்கு பிரச்சாரம் முதன்மையான இடத்தை பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் கருணாநிதி கோரியிருக்கிறார்.
இது அரசியலுக்காக, தேர்தலுக்காக, திமுகவுடன் கூட்டணிக்கு யாரும் தயாராக இல்லை என்பதால் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பு. எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதே திமுகவின் இலக்கு. மதுவிலக்கு வேண்டும் என்று ஆரம்பம் முதல் கோரி வருகிறது பாமக. இதனால், பெண்கள் மத்தியில் பாமகவுக்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
பாமக வளர்ச்சியைப் பார்த்து பயம் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். எனவேதான், மதுவிலக்கு கோரும் கட்சிகள் பட்டியலில் திமுக கடைசியாக இணைந்துள்ளது.
இன்று தமிழகத்தில் 4 வயது குழந்தைகூட மது குடிக்கிறது. இந்த அவலத்துக்கு காரணம் திமுக, அதிமுக கட்சிகளே. மதுவிலக்கு வேண்டுமென்று ஒட்டுமொத்த பெண்களும் விரும்புகின்றனர். இந்நிலையில் கருணாநிதியின் இந்த அறிவிப்பும் பாமகவுக்கு கிடைத்த வெற்றியே.
மதுவிலக்கை திமுக அமல்படுத்தும் என்ற நம்பிக்கை இல்லை. காலதாமதாக மதுவிலக்கு குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் கருணாநிதி அந்த அறிக்கையில்கூட மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து தெளிவாக சொல்லவில்லை" எனக் கூறியுள்ளார்.