உதகை
கொலக்கொம்பை போலீஸாரால் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் ஆதரவாளர் டெனிஷின் நீதிமன்றக் காவலை வரும் 26-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி பி.வடமலை உத்தரவிட்டார்.
கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் டெனிஷ் என்கிற கிருஷ்ணன் (31). இவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாவோயிஸ்ட் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். கேரளாவில் இவரைக் கைது செய்த காவல்துறை, திருச்சூர் சிறையில் அடைத்தது. போலீஸார் விசாரணையில் நீலகிரி மாவட்டம் கொலக்கொம்பை அருகே உள்ள நெடுகல்கொம்பை ஆதிவாசி கிராமத்துக்கு 2016-ல் சென்று வந்ததில் இவருக்குத் தொடர்பு உண்டு என காவல்துறை உறுதிப்படுத்தியது. பழங்குடியினர் இடையே துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து, அவர்களை மூளைச் சலவை செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது.
இதையடுத்து டெனிஷை கொலக்கொம்பை போலீஸார் கடந்த மாதம் 29-ம் தேதி கைது செய்து, உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பி.வடமலை டெனிஷை செப்டம்பர் மாதம் 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனிடையே கொலக்கொம்பை போலீஸார் டெனிஷை காவலில் எடுக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அதன் பேரில் ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதியளித்தார். ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்ட நிலையில், 24 மணிநேர கால கெடுவுக்குள் கொலக்கொம்பை போலீஸார் டெனிஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில், கேரளாவில் நிலுவையில் உள்ள வழக்குத் தொடர்பாக டெனிஷ் திருச்சூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த வழக்கு இன்று (செப்.12) விசாரணைக்கு வந்தததால், கேரள மாநில போலீஸார், கேரள தீவிரவாத தடுப்புப் பிரிவினர் மற்றும் நீலகிரி போலீஸார் என மூன்று அடுக்குப் பாதுகாப்புடன் டெனிஷ் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பி.வடமலை, இம்மாதம் 26-ம் தேதி வரை டெனிஷின் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டு, 26-ம் தேதி டெனிஷை ஆஜர்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதனால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டெனிஷ் அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணை முடிந்து வெளியே வந்த டெனிஷ், நீதிமன்ற வளாகத்திலேயே "கார்ப்பரேட் நிறுவனம் ஒழிக, நீதித்துறையில் தலையிடாதே, மாவோயிஸ்ட் ஜிந்தாபாத்", என்று கோஷம் எழுப்பிதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.