தமிழகம்

இருசக்கர வாகன பேரணிக்கு ஓசூரில் வரவேற்பு: 242 கோடி மரம் வளர்க்கும் திட்டத்துக்கு ஒத்துழைப்பு வேண்டும்- பொதுமக்களுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

ஓசூர்

242 கோடி மரம் வளர்க்கும் திட்டத் துக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஈஷா அறக் கட்டளை நிறுவனர் ஜக்கி வாசு தேவ் கூறியுள்ளார்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் 2017-ல் ‘நதிகளை மீட்போம்’ என்னும் தேசிய அள விலான இயக்கத்தை தொடங்கி னார். இந்த இயக்கத்தின் தொடர்ச்சி யாக தற்போது ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை தொடங்கி காவிரி ஆற்றின் கரையில் 242 கோடி மரக்கன்றுகளை நட்டு மழையை அதிகரிக்கும் திட்டத்தை தொடங்கி உள்ளார். இதையொட்டி, இருசக்கர வாகன பயணத்தை காவிரியின் பிறப்பிடமான தலைக் காவிரியில் கடந்த 3-ம் தேதி ஜக்கி வாசுதேவ் தொடங்கினார்.

இந்த பயணம் பெங்களூரு, ஓசூர், தருமபுரி, மேட்டூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் வழியாக திரு வாரூரில் நிறைவு பெறுகிறது. இரு சக்கர வாகன பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று காலை ஓசூர் வந்த ஜக்கி வாசுதேவ் மற்றும் குழுவினருக்கு வரவேற்பு அளிக் கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:

நமது நாட்டில் 80 சதவீதம் நிலம் விவசாயிகளிடம் உள்ளது. 16 சத வீதம் நிலம்தான் அரசிடம் உள்ளது. ஆகவேதான் காவிரி ஆற்றின் கரையில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் மரம் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மண் வளம் பெற மரத்தின் இலை மற்றும் மாட்டுச் சாணம் தேவை. விவசாய நிலங்களில் மரம் வளர்ப்பதால் மரத்தின் இலைகள் உதிர்ந்து மண் வளம் பெருகும். இது விவசாயி களுக்கான ஒரு மகத்துவமான திட்டம்.

இந்த திட்டத்தை செயல்படுத்து வதற்கு முன்பாக 70 ஆயிரம் விவசாயிகளின் நிலங்களில் மரம் வளர்த்து விவசாயம் மேற்கொள் ளப்பட்டது. அந்த விவசாயிகள் அனைவரும் அதிக மகசூல் பெற்று சுமார் 300 சதவீதம் முதல் 800 சதவீதம் வரை வருமானம் கிடைத்து பயனடைந்துள்ளனர்.

மரத்துக்கும் மேகத்துக்கும் தொடர்புண்டு. மரம் அதிகமுள்ள பகுதிகளில் மழை பொழிந்து, நீரோட்டமும், நிலத்தடி நீரும் பெரு கும். 242 கோடி மரம் வளர்க்கும் திட்டத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மக்களவை முன் னாள் துணைத் தலைவர் தம்பிதுரை, கிருஷ்ணகிரி எம்.பி. செல்லகுமார், ஓசூர் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா, பர்கூர் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோக ரன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT