என்.கணேஷ்ராஜ்
தேனி
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு சிறப்பு ஓணம் விருந்து நடைபெற்றது. தந்திரி வாசுதேவன் நம்பூதிரி இதற்கான வழிபாடுகளை நடத்தி விருந்தை தொடங்கி வைத்தார்.
மகாபலி சக்கரவர்த்தி ஒவ் வொரு ஆண்டும் மக்களை காண வருவதாக ஐதீகம். அவரை வரவேற்கும் விதமாக கேரள மக்கள் மலையாள மாதமான சிங்கம் மாதத்தில், திருவோண நட்சத்திரத் தில் பல்வேறு வழிபாடுகளில் ஈடுபடுவர். இந்த ஓணம் பண்டிகை கேரளாவில் 10 நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்.
இதைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலிலும் இதற்கான வழிபாடுகள் நடைபெற்றன. இதற்காக கடந்த 9-ம் தேதி நடை திறக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், படி பூஜை, தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்று வரு கின்றன.
ஓணம் பண்டிகையில் ‘ஓணம் சத்யா’ எனும் விருந்து பாரம் பரியமானது. அறுசுவைகளும் ஒன்றிணைந்த ஒரு மனமகிழ்வான விருந்துதான் ‘சத்யா’. ஐயப்பன் கோயிலில் நேற்று பக்தர்களுக்கு ‘ஓணம் சத்யா’ வழங்கப்பட்டது.
ஓணம் விருந்துக்காக மஞ்சள் மாதா கோயில் மற்றும் பிரசாதம் தயாரிப்பு மடம் அருகில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் தந்திரி வாசுதேவன் நம்பூதிரி ‘ஓணம் சத்யா’ வழிபாடுகளை மேற்கொண்டார். இதற்காக ஐயப்பனுக்கு சிறப்பு உணவுகள் படைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து பக்தர் களுக்கு ‘ஓணம் சத்யா’ நடைபெற் றது. புட்டுக் கிழங்கு, தோரன், பயறு, எரிசேரி, அப்பம், பரங்கிக் காய் குழம்பு, அப்பளம் ஆகியவற் றுடன் ஏராளமான காய்கறி, பயறு, அவியல் வகைகள், செரிமானத்தை ஏற்படுத்தும் இஞ்சிப்புளி பரிமாறப் பட்டன. சிறப்பு உணவுகள் கருத்து எடத்துமலை மோகனன் நம்பூதிரி தலைமையில் பாரம் பரிய பாலக்காடு முறைப்படி தயாரிக்கப்பட்டது.
கோயில் செயல் அலுவலர் பிரசாத், நிர்வாக அதிகாரி நீடுமர், சிறப்பு ஆணையாளர் மனோஜ், தந்திரி உதவியாளர் மனுநம்பூதிரி, கீழ்சாந்தி சுதிர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விருந்து நாளை வரை பக்தர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும். ஓணத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் அத்தப்பூ கோலம் போடப்பட்டிருந் தது.
பின்னர் ஐயப்பன் சிலையுடன் வளாகத்தைச் சுற்றி வந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தீபம் ஏந்தியபடி ஊழியர்கள் செல்ல தொடர்ந்து நம்பூதிரி உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர்.
நாளை ஓணம் பண்டிகைக்கான வழிபாடுகள் நிறைவு பெறுகின்றன. மாலை 5.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.